

வதோதராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 துப்புரவு தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.
குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஓட்டல் ஒன்றில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்ய வேண்டிய நிலையில், முதலில் ஒரு தொழிலாளி இறங்கியுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. அவரை அழைத்து பார்த்தும் எந்த பதிலும் இல்லை. இதையடுத்து அடுத்தடுத்து தொழிலாளர்கள் உள்ளே இறங்கியுள்ளனர். நான்கு தொழிலாளர்கள் இறங்கிய நிலையில் எந்தவித தகவலும் இல்லாத நிலையில் ஓட்டல் பணியாளர்கள் மூன்று பேர் உள்ளே இறங்கி தொழிலாளர்களை தேடியுள்ளனர்.
ஆனால் அவர்களும் வெளியே வரவில்லை. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். தொட்டியின் மூடியை முழுமையாக உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 7 பேரும் உயிரிழந்து இருந்தது தெரிய வந்தது. விஷ வாயு தாக்கியதில் 7 பேரும் மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இறந்தவர்களில், மகேஷ் பட்டன்வாடியா, அசோக் ஹரிஜன், பிரிஜேஷ் ஹரிஜன், மகேஷ் ஹரிஜன் ஆகிய 4 பேர் துப்புரவு தொழிலாளர்கள் ஆவர். விஜய் சவுத்ரி, சகாதேவ் வசவா, அஜய் வசாவா ஆகிய 3 பேர் ஓட்டல் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.
அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது. ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டு அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயுவின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் 7 பேரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.