

அசாம் குடிமக்கள் தேசிய பதிவேடு கூடுதல் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில் அதிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் உள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டது. இதன்படி குடியுரிமை மசோதா, மக்களவையில் ஜனவரி 8- ம் தேதி குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அசாம் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட குடிமக்கள் தேசிய பதிவேடு வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
இதில் லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து கூடுதல் வரைவு பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் மேலும் 1.02 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஜூலை 11- ம் தேதி முதல் உதவி மையங்களுக்கு சென்று உரிய ஆதாரம் இருந்தால் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.