

டெல்லியில் பெண்கள் பேருந்து, மெட்ரோக்களில் இனி இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் இயங்கும் பேருந்துகளில் பயணிக்கும் 40 லட்சம் பயணிகளில் 30% பேர் பெண்கள் ஆவர். இந்தத் திட்டத்தின் மூலம் அதிகக் கட்டணம் காரணமாக பாதுகாப்பான பயணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத பெண்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ''அதே நேரத்தில் டிக்கெட் வாங்கிப் பயணிக்க விரும்புபவர்கள், இந்த சலுகையைப் பயன்படுத்த வேண்டியதில்லை. ஏராளமான பெண்களால் பேருந்து, மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை சொந்தப் பணத்திலேயே பயன்படுத்திக்கொள்ள முடியும். அப்படிப்பட்டவர்கள் டிக்கெட் வாங்கிப் பயணிக்கலாம். இதன்மூலம் மற்ற பெண்கள் பயன்பெறுவர்.
டெல்லி அரசு மக்களின் பணத்தை, மக்களுக்காகவும் நேர்மையான வகையிலும் பயன்படுத்துகிறது. எனினும் லாபத்தில் இயங்கும் ஒரே அரசு இதுதான். எங்களுக்குப் பெண்களின் பாதுகாப்புதான் முக்கியம்
எனினும் டெல்லி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.700 கோடி செலவாகும் இத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படும். மெட்ரோவில் இலவசப் பயணம் குறித்து கேள்விகள் எழுகின்றன. இதுகுறித்தும் விரைவில் அறிவிப்போம்'' என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
''பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முதலீடாக இதைப் பார்க்கிறோம்'' என்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறினார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.