

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜெய்குமார் கோர் இன்று (சனிக்கிழமை) பாஜக அமைச்சர் கிரிஷ் மஹாஜனை சந்தித்தார். இந்த சந்திப்பு அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களைக் கைப்பற்றியது. எஞ்சிய 43 இடங்களை பாஜக கூட்டணி வென்றது.
இந்நிலையில், ஒரே ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான ஜெய்குமார் கோர் பாஜகவில் இணைவார் எனப் பேசப்பட்டது.
அதற்கேற்ப அவர் இன்று பாஜக பிரமுகரும் மாநில நீர்வளத் துறை அமைச்சருமான கிரிஷ் மஹாஜனை சந்தித்தது சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது. கோருடன் பாஜக எம்.பி. ரஞ்சித் சின்ஹ் நாயக் சென்றிருந்தார்.
ஆனால், கோரின் அலுவலகம் அவர் கட்சித் தாவப்போவதாக எழுந்துள்ள தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
காங்கிரஸ் நிலைமை இப்படி இருக்க, தேசியவாத காங்கிரஸ் கட்சி தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க இன்று அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளது. கட்சித் தலைவர் சரத் பவார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையக் காரணம் என்னவென்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நேற்று சரத் பவார் - ராகுல் காந்தி சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் நிலவும் தண்ணீர்ப் பஞ்சம் குறித்து இருவரும் பேசினர். அரசியல் விவகாரங்களும் ஆலோசிக்கப்பட்டது.