

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ‘ஜல்சக்தி’ துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அடுத்தடுத்து சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக பேசினர்.
நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி, உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்துள்ள மாநில முதல்வர்கள் பலரும் முக்கிய துறைகளின் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர்களை அடுத்தடுத்து சந்தித்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
பிரதமர் மோடி 2-ம் முறையாக பதவியேற்றபின், மத்திய அரசில் நீர்வளத்துறைக்கு பதிலாக ‘ஜல்சக்தி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் பொறுப்பேற்றுளார்.
டெல்லி வந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது காவிரி விவகாரம் தொடர்பாகவும், மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அவரிடம் கோரிக்கை மனுக்களை அவர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சற்று நேரத்துக்கு பிறகு கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது, காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதித்தார். மேலும் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாகவும் பேசினார்.
அவருடன் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடன் சென்றனர்.
முன்னதாக, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.