சிறையில் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்: அசைவ உணவுகள், மதுபான விருந்தை அனுமதித்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

சிறையில் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்: அசைவ உணவுகள், மதுபான விருந்தை அனுமதித்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
Updated on
2 min read

குற்றவாளிகளைத் திருத்தும் சிறைக்கூடம் பிக்னிக் ஸ்பாட்டாக மாறியதாக வந்த தகவல்களை அடுத்து உபியில் இரு சிறை அதிகாரிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 4 அன்று, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நைனி மத்திய சிறைச்சாலை நேற்று சமூக வலைத்தளங்களில் திடீரென இடம் பிடித்தது. அதற்குக் காரணம் அங்கு நடைபெற்ற விருந்தில் சிறைவாசிகளுக்கு நான்வெஜ் உணவுகள் மற்றும் மதுபானங்கள் பரிமாற்றமும் ஆனந்த நடனக் காட்சிகளும்தான்.

விருந்தில் சிறைவாசிகளின் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்தின் வீடியோ காட்சிகளும் புகைப்படக் காட்சிகளும் மறுநாள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து நைனி சிறைச்சாலையில் விருந்துக் கொண்டாட்டம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

சிறைவளாகத்துக்குள் நடந்த இவ்விருந்து கொண்டாட்டத்தில் ஏராளமான சிறைக்கைதிகளும் இடம்பெற்றுள்ளதாக வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்ததால் தற்போது உத்தரப் பிரதேச சிறைத்துறையையே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு அழுத்தங்களும் கேள்விக்கணைகளும் அவர்களை நோக்கி குவிந்துவருகின்றன.

ஆரம்பக்கட்ட விசாரணையில் இவ்விருந்துக்கொண்ட்டாட்ட வீடியோக் காட்சிகள் கடந்த ஜூன் 4 அன்று எடுக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு மறுநாள்தான் மாஃபியாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஆதிக் அகமது நைனி சிறையிலிருந்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறைக்கு மாற்றப்பட்டார்.

ஆதீக் அகமது சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்காக இந்த விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதால் கிட்டத்தட்ட சிறையில் இருந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இரு அதிகாரிகள் சஸ்பென்ட்

இதில் கடாயு பாஸி, உதய் யாதவ் மற்றும் ராணு ஆகிய கிரிமினல் குற்றவாளிகளும் பங்கேற்றதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் ஆதீக் அகமது சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்காகவே இக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கூடுதல் சிறைத்துறை இயக்குநர் சந்திர பிரகாஷ்கூறுகையில், இவ் வீடியோவில் மற்ற சிறைகளுக்கு மாற்றப்படும் கைதிகள் இருப்பதை பார்க்கமுடிகிறது. இதில் மற்ற சிறை அதிகாரிகளின் பங்கு இருப்பதும் விசாரணைக்குப் பிறகு வெளிவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சிறை வளாகத்துக்குள்ளாக மதுபான விருந்து நிகழ்ச்சியை அனுமதித்து கடமை தவறியதாக சிறைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இருவர் முல்சந்திரா டோஹ்ரி மற்றும் கிருஷ்ண குமார் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் இருவர் பற்றிய அறிக்கைகளும் உயரதிகாரிகள் மூலம் பெற்ற பிறகு காவல்துறை டிஜிபி இருவரையும் பணி இடை நீக்கம் செய்யும்படி செய்ய உத்தரவிட்டார்.

இவ்வாறு கூடுதல் சிறைத்துறை இயக்குநர் தெரிவித்தார்.

விருப்பம்போல ஆட்டம்போடும் உயர்ரக குற்றவாளிகள்

இச் சிறைவாசிகள் செல்போனில் விருப்பம்போல பேசிமகிழும் காட்சிகள் அடங்கிய மேலும் பல வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஓய்வுபெற்ற சிறை அதிகாரி ஒருவர், விசாரணைகளால் எந்தப் பயனும் இல்லை. என்றார்.

அவர் மேலும் கூறுகையில் அரசியல் ஆதரவை அனுபவிக்கும் அனைத்து உயர்ரக குற்றவாளிகளும் சிறையில் கிடைக்கும் ஆடம்பரங்களை அனுபவிக்கின்றனர். அவர்கள் வெளியில் இருந்து உணவைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள் அல்லது தங்கள் விருப்பப்படி உணவு சமைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் மொபைல்போன்கள், மதுப்புழக்கம் உள்ளிட்ட சிறையில் உள்ளே தடை செய்யப்பட்ட பொருட்கள் பலவற்றையும் தாராளமாக பயன்படுத்துகின்றனர். சிறைக்கு சென்றபிறகும் இக்குற்றவாளிகள் தங்கள் விருப்பம் போல திளைக்கும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வீடியோக்கள்க வெளிவருவதன்மூலம், இதைப்பற்றி மக்கள் புரிந்துகொள்ள ஏதுவாகும். இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் அதிகாரிகள் அங்கிருந்து அகற்றப்படுவார்கள். இதுதான் உண்மை'' என்றார்.

பணத்தால் மட்டுமே இந்த ஆடம்பரங்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சிறைவாசிகளின் இந்தமாதிரியான கொண்டாட்டங்களைக் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காகவே மாதாமாதம் சிறை ஊழியர்களுக்கு கிம்பளம் வழங்கப்படுகிறது. இந்த மாதிரி சிறைவாழ்க்கை தாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி சிந்திக்க வைக்காது'' என்றார்.

கடும் பாதுகாப்புடன் செல்லும் ஆதீக் அகமது

தங்கள் கும்பலைச் சார்ந்தவர்களையே உத்தரப் பிரதேச சிறைகளுக்குள் கொண்டுவரும் அளவுக்கு முக்தார் அன்சாரி, பாபுலு ஸ்ரீவத்ஸ்தவா மற்றும் ஆதீக் அகமது போன்றர்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. இவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக இருந்து அரசியல்வாதிகளாகவும் வலம் வருகிறார்கள்.

தியோரியா சிறைச்சாலையில் தங்கியிருந்தபோது ஆதீக் அகமது, ஒரு தொழிலதிபரை சிறையில் தாக்கினார். இதனால் தொழிலதிபர் அளித்த புகாரின்பேரில் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து குஜராத் சிறைக்கு அவர் மாற்றப்படுகிறார்.

சிறையில் ஒரு தொழிலதிபரை அடித்ததால் ஆதீக் அகமது தற்போது வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார். இவரை கடும் பாதுகாப்போடு அழைத்துச்செல்ல உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in