

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக எம்.பி.க்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கான சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
ராகுல் காந்தியின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இன்று மக்களவையில் புதிய சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்பிற்குப் பின் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக அவைத்தலைவர் டி.ஆர்.பாலு பொன்னாடை போர்த்தி ராகுலுக்கு தம் கட்சி சார்பில் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது, கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட திமுகவின் 19 எம்.பி.க்களும் உடன் சென்று மலர்க்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக எம்.பி.க்களுடன் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவனும் உடன் இருந்தார். இந்நிகழ்ச்சியின் போது ராகுலின் தாயும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தியும் உடன் இருந்தார்.