Last Updated : 16 Jun, 2019 11:56 AM

 

Published : 16 Jun 2019 11:56 AM
Last Updated : 16 Jun 2019 11:56 AM

பிஹாரில் மூளைஅழற்சி நோயால் குழந்தைகள் பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு: என்ன செய்கிறது நிதிஷ் குமார் அரசு? பெற்றோர்கள் புகார்

பிஹார் மாநிலம் , முசாபர்பூர் மாவட்டத்தில் மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

பிஹார் மாநிலம் முசாபர்பூரில் திடீர் காய்ச்சல் காரணமாக  ஜூன் 1-ம் தேதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் பல குழந்தைகள் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். தொடக்கத்தில் குழந்தைகள் சாதாரணமான காய்ச்சலால் இறந்ததாக மாநில அரசு தெரிவித்தது.

பின்னர், குழந்தைகளுக்கு மூளை அழற்சி நோய் இருப்பது தெரிந்தது. இந்நிலையில், நேற்றும் பல குழந்தைகள் மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து மூளை அழற்சிநோயால் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை நேற்று  67 ஆனது.

இந்நிலையில் இந்த எண்ணிக்கை இன்று 83 ஆக அதிகரித்தது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே கூறுகையில், " முசாபர்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 69 குழந்தைகளும் கேஜ்ரிவால் அரசு மருத்துவமனையில் 19 குழந்தைகளும் இறந்துள்ளதாகவும்  மூளை அழற்ச்சி நோயைத் தடுக்க மருத்துவர் குழுக்கள் அனுப்பப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்

இந்நிலையில், இன்று காலையில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகள் இறந்தன. இதனால் மூளை அழற்சி நோயால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுனில் குமார் சுஹி கூறுகையில், " மூளை அழற்சி நோயால் இன்று காலையில் இருந்து 3 குழந்தைகள் இறந்துள்ளன. கடுமையான வெயில், மற்றும் காற்றில் ஈரப்பதம் குறைவு போன்றவற்றால் இந்த மூளை அழற்சி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களிலும் குழந்தைகளை இறப்பை தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.

12 மாவட்டங்களில் உள்ள 222 வட்டங்களில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகள்  சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே முசாபர்பூருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று வந்தார். அவருக்கு பல்வேறு அமைப்பினர் கறுப்புக்கொடி காட்டி, குழந்தைகள் இறப்பை தடுக்காத மத்திய அரசு என்று கோஷமிட்டனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், " முசாபர்பூர் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநில அரசுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்படும் " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மருத்துவமனையில் இரவுப்பணியில் மருத்துவர்கள் இல்லாததே பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து முகமது அப்தாப் கூறுகையில், " என்னுடைய மகள் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் இரவுநேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால், சிகிச்சையை நர்ஸ் மட்டுமே அளிக்கிறார்கள், இதனால்தான் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என குற்றம்சாட்டினார்.

சுனில் ராம் என்பவர் கூறுகையில், " என்னுடைய 4 வயது மகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தேன். அவர் சிகிச்சை பலன்அளிக்காமல் இன்று இறந்துவிட்டார். அரசு என்ன செய்கிறது எனத் தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x