Last Updated : 23 Jun, 2019 12:00 AM

 

Published : 23 Jun 2019 12:00 AM
Last Updated : 23 Jun 2019 12:00 AM

5 நட்சத்திர விடுதி வசதிகளை தவிர்த்து தரையில் தூங்கிய கர்நாடக முதல்வர் குமாரசாமி

கர்நாடகா முதல்வர் குமாரசாமி கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் தங்குவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் எடியூரப்பா, ‘‘குமாரசாமி தனது சொந்த இல்லத்திலோ, அரசின் ‘கிருஷ்ணா' இல்லத்திலோ தங்காமல் 5 நட்சத்திர விடுதியில் தங்குவது ஏன்? இதற்கான செலவை செலுத்துவது யார்?''என கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குமாரசாமி கடந்த வெள்ளிக்கிழமை ‘கிராம தரிசனம்' நிகழ்ச்சியை தொடங்கினார். இதற்காக பெங்களூருவில் இருந்து யாதகிரிக்கு ரயிலில் சென்ற அவர், சந்திராகி கிராமத்தில் முகாமிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து பிரச்சினைகளை தீர்க்குமாறு உத்தரவிட்டார். பின்னர் பள்ளிக் குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டு, மக்களுடன் எளிமையாக பழகினார்.

அன்றைய‌ இரவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அங்குள்ள அரசுப் பள்ளியில் குமாரசாமி தங்கினார். தரையில் அவர் படுத்து தூங்கிய புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே குமாரசாமி பயன்படுத்துவதற்காக அரசுப் பள்ளியில் புதிதாக குளியலறை கட்டப்பட்ட தகவல் பரவியது. இதுகுறித்து பாஜக தலைவர்கள் கூறியபோது, ‘‘குமாரசாமி மக்களை ஏமாற்றுகிறார்'’ என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து குமாரசாமி, ‘‘நான் பெங்களூருவில் இருந்து ரயிலில் வந்து, இந்த கிராமத்துக்கு பேருந்தில்தான் வந்தேன். ஹெலிகாப்டரோ, ஏசி பேருந்தோ பயன்படுத்தவில்லை. 5 நட்சத்திர விடுதியிலும் தங்கி இருக்கிறேன். குடிசையிலும் தங்கி இருக்கிறேன். என்னால் சாலையோரத்தில்கூட படுத்து தூங்க முடியும். என் தந்தை தேவ கவுடா பிரதமராக இருந்தபோது ரஷ்யாவில் உள்ள கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையிலும் தங்கி இருக்கிறேன்.

எனவே பாஜகவினரிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் பயன்படுத்துவதற்காக சிறிய அளவில் ஒரு குளியலறை கட்டப்பட்டுள்ளது. அதனை நான் போகும்போது முதுகிலா கட்டிக்கொண்டு போகப் போகிறேன்? அது இங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு தானே பயன்படப் போகிறது''என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று யாதகிரியில் இருந்து குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ஹொரூர் கிராமத்திற்கு குமாரசாமி சென்றார். அங்கு கனமழை பெய்து வருவதால், கிராம தரிசனம் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பெங்களூரு திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x