

பிஹார் மாநிலம் முசாபர்பூரில் மூளை அழற்சியால் 126 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் அடுத்த ஒருவாரத்துக்குள் மத்திய அரசு, பிஹார், உ.பி. அரசுகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஹார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சியால் கடந்த ஒருவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம் நடந்தது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கறிஞர் மனோகர் பிரதாப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்தாவது :
''பிஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோயாபால், கடந்த சில வாரங்களில் 10 வயதுக்குட்பட்ட 126 குழந்தைகள் உயிரிழந்துள்ளது வேதனையளிக்கிறது. நாளுக்கு நாள் இந்த உயிர் பலி அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு, பிஹார், உத்தரப் பிரதேச அரசு ஆகியவற்றின் மெத்தனப் போக்கு, செயல்பாட்டுக் குறைவு, உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்ததால், இந்த அளவுக்கு உயிர் பலி ஏற்பட்டுள்ளது. பச்சிளங் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை தொடங்கும் முன்பே உயிரிழந்து வருகின்றனர், இந்த பலியைத் தடுக்காமல் மத்திய அரசும், மாநில அரசுகளும் வேடிக்கை பார்க்கின்றன.
முசாபர்பூர் மாவட்ட மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள இல்லை, மருந்துகள் இல்லை. தீவிர சிகிச்சை மையங்கள் இல்லாததால், குழந்தைகள் மரணம் தொடர்கிறது என நாளேடுகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் தெரிவிக்கின்றன.
இந்த மூளை அழற்சி நோயைத் தடுக்க அனைத்து விதமான நடவடிக்களைகளையும் எடுக்க பிஹார், மத்திய அரசு, உ.பி. அரசுக்கு உத்தரவிட வேண்டும். பலியான குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்வழங்க வேண்டும்.
மேலும், 100 நடமாடும் மருத்துவனைகள், 500 தற்காலிக மருத்துவனைகளை பிஹார் அரசு தொடங்கி சிகிச்சையை தீவிரப்படுத்த உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு வழக்கறிஞர் மனோகர் பிரதாப் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். காவே ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "அடுத்த 7 நாட்களுக்குள் மத்திய அரசு, உ.பி. பிஹார் அரசுகள் மூளை அழற்சி நோயைத் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, என்ன மாதிரியான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன, சத்துணவுகள் என்ன வழங்கப்படுகின்றன, சுகாதார நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றன, மாநிலங்களில் சுகாதாரப் பணிகள் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். 10 நாட்களுக்குப் பின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்" என உத்தரவிட்டார்.