Published : 20 Jun 2019 12:00 AM
Last Updated : 20 Jun 2019 12:00 AM

உரசல்கள் இருந்தாலும் அமெரிக்காவுடன் தொடரும் நல்லுறவு

இந்தியா - அமெரிக்கா இடையே சிறுசிறு உரசல்கள் இருந்தாலும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையேயான வளர்ந்து வரும் உறவையே காட்டுகிறது. டெல்லியில் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் பாம்பியோ பங்கேற்கிறார். இம்மாத இறுதியில் ஜப்பானின் ஒஸாகாவில் நடக்கவிருக்கும் ஜி-2- மாநாட்டின்போது, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துப் பேச இருக்கிறார். அதற்கு முன்னோட்டமாக, பாம்பியோ பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். இரு நாடுகளும் பிராந்திய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் விவாதிக்க நிறைய விஷயங்கள் உள்ளன.

அரசியல்ரீதியாக இந்தியாவும் அமெரிக்காவும் நீண்ட தூரத்தை ஒன்றாக கடந்து வந்துள்ளன. சமீப காலமாக தீவிரவாதம் மற்றும் அது தொடர்பான விஷயங்களில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அமெரிக்கா தீவிர அழுத்தம் கொடுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி மசூத் அஸாருக்கு எதிரான தீர்மானத்தில் சீனா தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்கா, அந்த விஷயத்தில் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்டிக்கும் விதத்திலும் அமெரிக்கா கடுமையாக நடந்து கொண்டுள்ளது. இந்தியாவும் அமெரி்க்காவும் நெருங்கி வருவதை தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதைத் தாண்டியும் பல அண்டை நாடுகள் அச்சத்துடன் பார்த்து வருகின்றன.

தன்னிடம் இருந்து அதிக அளவில் அதிநவீன ஆயுதங்களை இந்தியா வாங்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது இந்தியாவின் தேவை மற்றும் சலுகை விலையைப் பொறுத்தது. தீவிரவாத அச்சுறுத்தலை காரணம் காட்டி, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களை வாங்க இந்தியா விரும்புகிறது. ஆனால், அதைத் தவிர்க்கும்படி அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவின் தாட் எனப்படும் பேட்ரியாட் ஏவுகணைகள் மிகவும் சிறந்தவை என்பதற்காக, அமெரிக்கா வாங்கச் சொல்லவில்லை. ரஷ்யாவை பழிவாங்கவே நினைக்கிறது. அதேபோல், இந்தியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் அமெரிக்கா விரும்பவில்லை. அதைத் தவிர்க்கும்படி வலியுறுத்தி வருகிறது. வரலாற்று ரீதியாகவும் கலாச்சார, அரசியல் ரீதியாகவும் உருவாக்கப்பட்டுள்ள இந்திய வெளியுறவுக் கொள்கைகளின் அடிப்படையை ட்ரம்ப் நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை திடீரென தலைகீழாக மாற்றிக் கொள்ள முடியாது என்பதையும் உணர வேண்டும்.

பெரும் பிரச்சினையாக மாறியுள்ள இருதரப்பு வர்த்தகமும் சுமுகமாக பேசித் தீர்க்கப்பட வேண்டும். அதிகரித்துள்ள வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் சீனா மீது மட்டுமல்லாமல் தனது நெருங்கிய கூட்டாளி நாடான ஜப்பான் மீதும் அமெரிக்கா இறக்குமதி வரி விகிதங்களை அதிகரித்து நடவடிக்கை எடுத்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். வரி விகிதத்தை அதிகரிப்பதால் மட்டுமே வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க முடியாது என்பதை ட்ரம்ப் உணரவில்லை. ஏன் சீனாவும் ஜப்பானும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதை விட அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன, அதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து அதை மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ட்ரம்ப்பின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரியை பிரதமர் மோடி குறைத்தார். இருந்தாலும் அதில் திருப்தி அடையாத ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்பி எனப்படும் வர்த்தகச் சலுகையை விலக்கிக் கொண்டது. பாம்பியோ தனது வருகையின்போது, தகவல்களை இந்தியாவிலேயே சேமிப்பது குறித்தும் 5 ஜி அமல் குறித்தும் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், சீனாவின் ஹுவாய் நிறுவனம் இந்தியாவுக்கு 5 ஜி வசதியை அளிக்கும் நிறுவனங்களின் ஏலத்தில் பங்கேற்பதை அமெரிக்கா தடுக்குமா என்பதும் இனிமேல்தான் தெரிய வரும்.

வர்த்தகம் தொடர்பான பிரச்சினையில் அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா என அமெரிக்க பத்திரிகைகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதன் முதல் கட்டமாகத்தான் ஜிஎஸ்பி சலுகை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடுமையான வரி விதிப்பு என்பது இரு வழிப்பாதை என்பதையும் இதனால் அமெரிக்காவின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதையும் சீனா விஷயத்தில் அமெரிக்கா உணர்ந்திருக்கும். விரைவில் மற்ற நாடுகள் விஷயத்திலும் உணரும். இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு தொடர்ந்து நல்ல முறையில் வளர்வது இரு தரப்பும் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும். இந்த நல்லுறவு வெற்றிகரமாகத் தொடர்வதற்கு நல்ல புரிந்துணர்வு அவசியம். அதோடு, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியில் அவசர ரீதியாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால்தான் கடந்த பல ஆண்டுகளாக மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்ட நல்லுறவு தொடரும்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x