

விமானத்தில் கொண்டு சென்ற உடைமைகள் காணாமால் போனதால், ஜி-20 மாநாட்டின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல், மத்திய நிதித்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தவித்தார்.
ஆஸ்திரேலியாவில் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கி, நாளை நிறைவடைகிறது. மத்திய நிதியமைச்சர் உடல்நலக்குறைவு காரணமாக, அருண் ஜேட்லி இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை.
அவருக்குப் பதிலாக நிதித் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். இதற்காக, நிர்மலா சீதாராமன் நேற்று ஆஸ்திரேலியா சென்றார். முதலில் சிட்னி சென்று பிறகு மாநாடு நடக்கும் கெய்ர்ன்ஸ் நகருக்கு வேறொரு விமானத்தில் சென்றார். அப்போது, அவருடன் கொண்டு வந்திருந்த உடமைகள் எங்கோ தவறிவிட்டன.
இதனால், நேற்று மாலை நடைபெற்ற, நிதியமைச்சர்களை கவுரவிக்கும் வரவேற்பு நிகழ்ச்சி யில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. இதுதொடர்பாக, நிர்மலா சீதாராமன் ட்விட்டரில், “கெய்ர்ன் ஸில் இன்று மாலை நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததற்கு வருந்துகிறேன். ஓட்டல் அறையிலேயே தங்கியிருக் கிறேன். காணாமல் போன எனது உடைமைகள் பற்றி இதுவரை தகவலில்லை” எனக் கூறியுள்ளார்.
எனது அனைத்து உடைகளும் எனது பெட்டியில்தான் உள்ளன. கெய்ர்ன்ஸில் புடவை வாங்க முடியுமா எனத் தெரியவில்லை. நிலைமை சிக்கலாகத்தான் உள்ளது என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். பல மணி நேர முயற்சிக்குப் பிறகு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.. அந்தப் பெட்டி கெய்ர்ன்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது