

ஆஸ்கர் விருது வென்ற 'பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்' ஆவணப்படத்தில் நடித்த சினேகா, சுமன் ஆகிய இருவரை அவர்கள் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் பணியிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கியுள்ளதாக அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் எனக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கியிருந்தார். ஆனால் அந்தப் பணம் நிறுவத்துக்கு சொந்தமானது எனக் கூறுகிறது ஆக்ஷன் இந்தியா அமைப்பு. இந்த சர்ச்சையில் எங்களை நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது என்று கூறுகிறார் சினேகா.
சுமன் பேசும்போது, "எங்கள் ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் கிடைத்தவுடன் அகிலேஷ் யாதவ் எங்களை சர்வதேச மகளிர் தினத்தன்று அழைத்து ரூ.1 லட்சம் அளித்தார். அதன் பின்னர் மார்ச் 17-ம் தேதியன்று எங்கள் நிறுவனம் எங்களை அழைத்து அந்த காசோலையை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியது. அந்தப் பணம் ஆக்ஷன் இந்தியா நிறுவனத்துக்கே சொந்தமானது என்றது.
நான் அதை ஏற்க மறுத்தேன். ஆனால், தொடர்ந்து அங்கு வேலை பார்த்தேன். அந்த மாதக் கடைசியில் எனக்கு சம்பளம் அளிக்கப்படவில்லை. இருந்தாலும் ரூ.1 லட்சம் வெகுமதியை விட்டுத்தர மனமில்லை. இப்போது எங்களை பனியிலிருந்து அந்நிறுவனம் நீக்கியுள்ளது. நீக்கும்போது எனக்கு மட்டும் ஏப்ரல், மே சம்பளத்தைக் கொடுத்துவிட்டனர்" என்றார்.
ஆனால், சினேகாவுக்கு சம்பளத்தைக் கொடுக்கவில்லை. அது குறித்து அவர் கேட்டபோது "ஏற்கெனவே அகிலேஷிடமிருந்து 1 லட்சம் வெகுமதி கிடைத்துவிட்டது. அதனால், வேலையில் இருந்து நின்று கொள்ளவும்" என ஆக்ஷன் இந்தியா கூறியுள்ளது.
"எனக்கு என் வேலை திரும்ப வேண்டும். ஆஸ்கர் விருது வென்றுவிட்டு வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது" என்று கூறுகின்றனர் சினேகாவும், சுமனும்.
‘பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ சிறு குறிப்பு:
இந்தியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதைத் தட்டிச்சென்றது. மாதவிடாய் குறித்து இந்தியக் கிராமங்களில் நிலவும் மூடநம்பிக்கைகளை மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கிறது இந்தப் படம். இந்தியாவைச் சேர்ந்த குனீத் மோங்கா தயாரிப்பில், ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் இயக்குநர் ராய்க்கா ஸெட்டாப்ச்சி (25) இதை இயக்கியிருந்தார்.
மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகள் அதிகம். இந்த உண்மை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இந்திய கிராமங்களில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, 26 நிமிடங்களில் இந்தப் படம் விவரிக்கிறது.