Published : 10 Jun 2019 09:25 AM
Last Updated : 10 Jun 2019 09:25 AM

மேற்குவங்கத்தில் பெரும் வன்முறை; கண்டித்து முழு அடைப்பு போராட்டம்:  பாஜக அழைப்பு

மேற்குவங்கத்தில் பாஜகவினர் மீது நடந்து வரும் வன்முறை சம்பவங்களை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் திரிணமூல் கட்சிக்கு 39 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் திரிணமூல் கட்சியின் வாக்குச் சதவீதம் 43 சதவீதமாக அதிகரித்தாலும், வெற்றி பெற்ற இடங்கள் 34-ல் இருந்து 22 ஆக குறைந்துவிட்டது.

பிரதமர் மோடியின் திட்டமிட்ட பிரச்சாரங்கள், அமித் ஷாவின் திட்டங்கள் எல்லாம் பாஜக.வுக்கு ஆதரவாக மாறின. அதற்கு பலனாக கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. அத்துடன் மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலில் வெறும் 17 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 40.5 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டது.

இதனால் இருகட்சி தொண்டர்களிடையே அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. 24 பர்கானா மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பாஜக கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் பாஜக தொண்டர்கள் 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சயந்தன் பாசு தெரிவித்தார். மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்கள் கட்சித் தொண்டர்கள் 3 பேரை பாஜகவினர் கத்தியால் குத்திக் கொன்றதாக மாநில அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக் தெரிவித்துள்ளார். இரு தரப்பிலும் 8 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலர் படுகாயம் அடைந்தனர். 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. வன்முறையில் பாதிக்கப்பட்ட பாஜக குடும்பத்தினரை தங்கள் அலுவலகங்களுக்கு கட்சி நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். ஆனால் போலீஸார் அவர்களை தடுத்தனர். இதனால் போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் நடந்தது.

உயிரிழந்த பாஜக தொண்டர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய இடுகாட்டுக்கு கொண்டு சென்ற நிலையில் திடீரென இறுதிச் சடங்குகள் நிறுத்தப்பட்டன. பாஜக தொண்டர்கள் கொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் இறுதிச் சடங்குகள் செய்ய மாட்டோம் எனக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மேற்குவங்க வன்முறையை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அம்மாநில பாஜக அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x