Last Updated : 05 Jun, 2019 04:58 PM

 

Published : 05 Jun 2019 04:58 PM
Last Updated : 05 Jun 2019 04:58 PM

மாயாவதியுடனான கூட்டணி ஒரு சோதனை முயற்சிதான்; வெற்றி பெறவில்லை: அகிலேஷ் யாதவ் வெளிப்படை

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியுடான கூட்டணி ஒரு சோதனை முயற்சிதான். அது வெற்றி பெறவில்லை என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, பாஜகவை வீழ்த்தும் திட்டத்துடன் உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. இந்தக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் மிக அதிகாமான இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும் மட்டுமே வென்றது. 62 தொகுதிகளை ஆளும் பாஜக கைப்பற்றியது.

உத்தரப் பிரதேசத்தில் எம்எல்ஏக்களாக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த 9 பேர் எம்.பி.க்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபோலவே சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள 11 காலி இடங்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மாயாவதியும், அகிலேஷ் யாதவும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கூறியதைத் தொடர்ந்து, மெகா கூட்டணியில் அங்கமாக இருந்த ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியும் தனித்துக் களமிறங்க முடிவு செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணியில் அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லக்னோவில் சமாஜ்வாதி கட்சி சார்பில் நடந்த ரமலான்  பண்டிகை நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் அமைத்த மெகா கூட்டணி குறித்துக் கேட்டனர்.

அதற்கு அவர் கூறுகையில், "நான் மாணவராக இருந்த காலத்தில் இருந்தே பல்வேறு சோதனை முயற்சிகள் செய்து பார்ப்பேன். அதில் சிலநேரங்களில் தோல்வியிலும் முடிந்திருக்கிறது. அப்போதுதான் அது தவறு என்று நாம் உணர முடியும்.

மாயாவதியும், நானும் கூட்டணி முடிவு செய்யும்போது என்ன பேசினோமோ அதைத்தான் இன்றும் நான் பேசுகிறேன். மாயாவதிக்கு அளிக்கும் மரியாதை எனக்கு அளிக்கும் மரியாதையைப் போன்றது.

இந்த மெகா கூட்டணியைத் தவிர்த்து, இடைத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடவேண்டுமென்றால், நான் எங்கள் கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசித்து, எதிர்காலத் திட்டங்களை அறிவிப்பேன். தனித்துப் போட்டியிட முடிவு செய்தால் வழி தனிதான். 2022-ம் ஆண்டு மாநிலத்தில் ஆட்சிக்கு வரக்கூடிய வழிகளை சிந்திப்போம்" என அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ''சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து மாயாவதி, யாதவ் மற்றும் முஸ்லிம் வாக்குகள், தலித் வாக்குகளை அதிகம்  பெற்றுக்கொண்டார். ஆனால், தலித் மக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதிக்கு தலித் வாக்குகள் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால்,தான் பகுஜன் சமாஜ் 38 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களிலும், சமாஜ்வாதி 37 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களிலும்வென்றது'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x