Published : 03 Jun 2019 06:10 PM
Last Updated : 03 Jun 2019 06:10 PM

உ.பி.யில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி முறிந்தது: இடைத்தேர்தலில் தனித்துப்போட்டியிட முடிவு?

உத்தர பிரதேசத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட பகுஜன் சமாஜ் முடிவு செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள்  மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் அந்த கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மீதமுள்ள 78 தொகுதிகளிலும் அந்த கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தியது.

பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் வென்றது. அவர்களின் கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரீய லோக் தளம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. 62 தொகுதிகளை ஆளும் பாஜக கைப்பற்றியது. மெகா கூட்டணி தோல்வியடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் மாயாவதி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன வேட்பாளர்கள், மண்டல் நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாயாவதி ‘‘கூட்டணியை நம்பி பகுஜன் சமாஜ் கட்சித் நிர்வாகிகள் இருக்கக்கூடாது. வரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் எம்எல்ஏக்களாக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த 9 பேர் எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபோலவே சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வாகியுள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள 11 காலியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் இடைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்து களம் காண பகுஜன் சமாஜ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வாக்குகள் தங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என மாயாவதி கருதுவதாகவும் தெரிகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x