பேச்சு நடத்த இந்தியா தயார்’: பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட செய்திக்கு மத்திய அரசு மறுப்பு

பேச்சு நடத்த இந்தியா தயார்’: பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட செய்திக்கு மத்திய அரசு மறுப்பு
Updated on
1 min read

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என்று பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பாகிஸ்தானுக்கு முறைப்படி வாழ்த்துச் செய்திதான் பகிர்ந்தனர் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

எக்ஸ்பிரஸ் டிரிபியுன் நாளேடு வெளியிட்ட செய்தியில், " பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பிராந்திய நலனுக்காக பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளுடன் சுமுக உறவை வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்" எனத் தெரிவித்தது.

ஆனால், இந்த நாளேட்டில் வந்த செய்தி உண்மையில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெளியுறவுத்துறை அமைச்சர் மெகமூத் குரேஷி ஆகியோர் இந்தியப் பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர்.அந்த வாழ்த்துக்குப் பதில் அளித்து மட்டுமே மோடி பேசியுள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் கூறுகையில், "பாகிஸ்தான் பிரதமர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களின் செய்தியில் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் கூட்டுறவு, ஒத்துழைப்பை இந்தியா பராமரிக்க விரும்புகிறது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு பிரதமர் மோடி தனது பதிலில், "நம்பிக்கையை ஏற்படுத்தி, தீவிரவாதம் இல்லாத சூழலையும், வன்முறையற்ற நிலையையும், விரோதமில்லாத போக்கையும் கடைபிடிப்பது மிகவும் முக்கியம். தீவிரவாதத்தின் நிழல் இல்லாத சூழலை உருவாக்குவது அவசியம் என்று தெரிவித்திருந்தார்.

இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த எந்தவிதமான பதிலையும், கருத்தையும் பிரதமர் மோடி சார்பில் வெளியிடப்படவில்லை. அவ்வாறு குறிப்பிடவும் இல்லை" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கிரிகிஸ்தானில் பிஷ்கெக் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்றபோது, பிரதமர் மோடியும், பிரதமர் இம்ரான் கானும் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ஆனால், பேச்சு ஏதும் நடத்தவில்லை. அப்போது, தேர்தலில் வென்று 2-வது முறையாக பிரதமராக வந்ததற்காக வாழ்த்து மட்டுமே தெரிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோட் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானுடன் எந்தவிதமான பேச்சுவார்ததையும் இந்தியா நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in