

ஓவைஸி போன்றோரால்தான் முஸ்லிம்களுக்கு இழுக்கு ஏற்படுகிறது என அயோத்தி சவானி கோயில் பூசாரி பரமஹன்ஸ் தாஸ் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தாஸ், "ஓவைஸி போன்ற சில அவமானச் சின்னங்கள் இந்த சமுதாயத்தில் இருக்கிறார்கள். அவர்கள்தான் நாட்டில் தீவிரவாதம் பெருக, இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் ஓங்க, இஸ்லாம் மதத்தின் மீது இழுக்கு சேரக் காரணம்.
ஓவைஸி சொல்வதுபோல் நம் நாட்டில் எப்போதுமே முஸ்லிம்கள் அச்ச உணர்வுடன் வாழ்ந்ததில்லை. ஓவைஸி போன்றோர் இந்தியாவிலேயே வாழ்ந்து கொண்டே இந்தியாவுக்கு எதிரான கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். மக்கள் இப்படிப்பட்டவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
முன்னதாக ஹைதராபாத்தில் மக்கா மசூதியில் பேசிய ஓவைஸி, "மோடியால் கோயிலுக்குச் செல்ல முடியும் என்றால். நம்மால் மசூதிக்கு செல்ல முடியும். மோடி ஒரு குகையில் தியானம் செய்வார் என்றால் நம்மால் நமது மசூதியில் பெருமிதத்துடன் தொழுகை செய்ய முடியும்.
300 சீட்களுக்கு மேல் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வது என்பது பெரிய விஷயம்தான். இந்தியாவில் அரசியல் சாசனம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதனால் பாஜகவின் 300 சீட்களால் நமது உரிமைகளைப் பறிக்க இயலாது" எனப் பேசியிருந்தார்.
மோடி ஆட்சி அமைந்துள்ளதால் முஸ்லிம்கள் அச்சப்பட வேண்டாம் என ஓவைஸி பேசியதை சுட்டிக்காட்டியே அயோத்தி பூசாரி இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார்.