

‘கடந்த 19993 2011-ம் ஆண்டுகளுக்கு இடையே வழங்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவை ஏற்கத் தயார்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 93 2011 இடையே வழங்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த உரிமங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இவற்றை ரத்து செய்வது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு சார்பில் நிலக்கரித்துறை சார்பு செயலர் அகோரி சஞ்சய் சகாய் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 93 2011 இடையே வழங்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமத்தை ரத்து செய்வது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம். உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவை மத்திய அரசு ஏற்கத் தயார். இந்த 218 சுரங்க உரிமங்களில் 46 உரிமங்களை அனுமதிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கலாம். இந்த 46-ல் 40 சுரங்கங்கள் தற்போது நிலக்கரி உற்பத்தி செய்து வருகின்றன. ஆறு சுரங்கங்கள் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள ஆறு சுரங்கங்கள் குறித்த முதல் தகவல் அறிக்கை விவரங்களையும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த உரிமங்களை ரத்து செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரத்து செய்வதால் ஏற்படும் இழப்பு, புதிதாக ஏலம் மூலம் உரிமங்கள் வழங்க ஏற்படும் கால அளவு ஆகியவை குறித்து ஆலோசித்த பின் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, புதிய உரிமங்களை இந்த ஆண்டு இறுதியில் ஏலம் மூலம் வழங்க மத்திய நிலக்கரி மற்றும் எரிசக்தி துறை முன் ஏற்பாடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.