Published : 06 Jun 2019 12:58 PM
Last Updated : 06 Jun 2019 12:58 PM

வங்கி ஆன்லைன் பரிவர்த்தனை ‘நிப்ட்’, ‘ஆர்டிஜிஎஸ்’ கட்டணங்கள் ரத்து; ஏடிஎம் கட்டணங்களுக்கும் வருகிறது கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதன் பயன் வாடிக்கையாளர்களை சென்றடையும் வண்ணம் வர்த்தக வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இந்தக் கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரெப்போ 6.00 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை மற்ற வர்த்தக வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வேறு பல பொருளாதார முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

* வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக NEFT மற்றும் RTGS பண பரிவர்த்தனைகள் செய்வதற்கு தற்போது வங்கிகள் வசூலித்து வரும் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.

* இதன் பயன் வாடிக்கையாளர்களை சென்றடையும் வண்ணம் வர்த்தக வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வங்கிகளின் ஏடிஎம் கட்டணங்களை வரன்முறை படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க குழு ஒன்றையும் அமைக்கவுள்ளது. இந்தியன் வங்கியின் தலைவர் தலைமையிலான வர்த்தக வங்கிகள் கூட்டமைப்பு இதுகுறித்து ஆய்வு செய்து பரிந்துரை அளிக்கும்.

* நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகித இலக்கை 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைத்து இன்றையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

*  பணவீக்க விகிதம் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 3.0 சதவீதமாகவும், இரண்டாவது அரையாண்டில் 3.4 சதவீதம் முதல் 3.7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, வங்கி பண பரிவர்த்தனைகளுக்கள் நிப்ட் கட்டணமாக ரூ. 1 முதல் ரூ. 5 வரை வசூலிக்கிறது. அதுபோலவே ஆர்டிஜிஎஸ் கட்டணமாக ரூ. 5 முதல் ரூ. 50 வரை வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x