

பாரதிய ஜனதா சங் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி இறப்பு குறித்த விசாரணைக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறுத்துவிட்டார் என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.
ஜன சங்கம் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 66-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா , கட்சித் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், "ஷியாமா பிரசாத் முகர்ஜி மறைவு குறித்து நாங்கள் அப்போது விசாரணைக்கு உத்தரவிடக் கோரினோம். ஆனால், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அதற்கு மறுத்துவிட்டார். முகர்ஜியின் தியாகத்தை வரலாறு அடையாளப்படுத்துகிறது. அவரின் தியாகம் வீணாகாது.
கடந்த 1953-ம் ஆண்ட மே 11-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் அனுமதியின்றி நுழைய முயன்றதாக முகர்ஜி கைது செய்யப்பட்ட நிலையில் ஜூன் 23-ம் தேதி இறந்தார். அவரின் இறப்பு குறித்து விசாரணை கோரினோம். ஆனால், விசாரிக்க உத்தரவிடவில்லை " எனத் தெரிவித்தார்.
பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா ட்விட்டரில் கருத்து கூறுகையில், "முகர்ஜியைப் பொறுத்தவரை நாடுதான் முதன்மையானதாக இருந்தது. அதனால், நாட்டின் ஒற்றுமைக்காக,நம்பிக்கைக்காக அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் தியாகம் செய்தார். நாட்டில் முதல் தேசிய இயக்கத்தைத் தொடங்கியவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி. ஒரு நாட்டுக்கு 2 சட்டங்கள், 2 சின்னங்கள், இரு அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இருந்தார்.
தேசத்தை மறுகட்டமைக்கும் நோக்கில் முகர்ஜி ஜனசங்கத்தைத் தோற்றுவித்தார். ஜம்மு காஷ்மீர், மேற்குவங்கம் இன்று நாட்டின் அங்கமாக இருந்து சுதந்திரமாக அங்கு நாம் செல்ல முகர்ஜியின் தியாகம்தான் காரணம். அவரின் கால்பாதங்களில் பணிந்து வணங்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் கூறுகையில், "இன்றைய நாளில் தியாகி ஷியாமி பிரசாத் முகர்ஜியை நினைவுகூர்கிறோம். தன்னுடைய வாழ்வை, தேசத்தின் ஒற்றுமைக்காக, நலனுக்காக செலவிட்டார். அவரின் வலிமையான,ஒன்றுபட்ட இந்தியா எனும் உணர்வு தொடர்ந்து கடைபிடித்து, வலுப்படுத்தி, 130 கோடி மக்களுக்கு சேவை புரிவோம்" எனத் தெரிவித்தார்.