

ஆந்திர மாநிலத்தில் மத்திய புலனாய்வு துறையான சிபிஐ-க்கு முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு விதித்த தடையை தற்போதைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு திரும்பிப் பெற முடிவெடுத்துள்ளது.
கடந்தமுறை பாஜக கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த தெலுங்குதேசம் கட்சி தேர்தலுக்கு முன்பாக கடந்த ஆண்டு அரசில் இருந்து வெளியேறியது. இதையடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் ஆளும் கட்சியான தெலுங்கு தேச கட்சியின் எம்பிக்கள், ஆதரவாளர்களின் நிறுவனங்கள், வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றது.
இதையடுத்து, அப்போதைய ஆந்திர முதல்வர் மத்திய புலனாய்வு துறையான சிபிஐ-க்கு தடை விதித்தார். டெல்லியை தவிர, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசு, (General consent) பொது ஒப்புதல் அளிப்பது அவசியம்.
இந்த பொது ஒப்புதலை நேற்று முன் தினம் ஆந்திர அரசு வாபஸ் பெற்று கொள்வதாக அறிவித்து, அதற்கான அறிக்கையையும் கெஜெட்டில் வெளியிட்டது. இதன் மூலம், ஆந்திர மாநிலத்தில் சிபிஐ அதிகாரிகள் யாரும் சோதனைகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
சிபிஐ இல்லாமலேயே ஆந்திர மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மட்டும் செயல்படும் நிலை இருந்தது. இந்தநிலையில் சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வியடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டி புதிய முதல்வராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முந்தைய அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக அவர் வாபஸ் பெற்று வருகிறார்.அதன்படி சிபிஐக்கு தடை விதித்து சந்திரபாபு நாயுடு அரசு கொண்டு பிறப்பித்த உத்தரவை ஜெகன் மோகன் ரெட்டி அரசு திரும்பப் பெற முடிவெடுத்துள்ளது. இதனை ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி சாய் சேகர் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விரைவில் இதற்கான உத்தரவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறப்பிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் பழையபடி சிபிஐ அதிகாரிகள் ஆந்திராவில் சோதனை நடத்தவும், கைது செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.