

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்துவது தொடர்பான தேசிய அளவிலான பிரச்சாரம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
உ.பி.யின் பதான் அருகே உள்ள கத்ரா சதத்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த மே மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால், இரவு நேரத்தில் திறந்தவெளிக்கு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தன்னார்வத் தொண்டு நிறுவன மான சுலப் இன்டர்நேஷனல் சார்பில் சதத்கஞ்ச் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குறைந்த செலவில் கட்டப் பட்ட கழிப்பறைகள் ஞாயிற்றுக் கிழமை திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் பிந்தேஸ்வர் பதக் கூறும்போது, “கிராமப்புறங்களில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் பெண்கள் பாலியல் பலாத்கா ரத்துக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள் ளப்படும்” என்றார்.