அமைச்சராக பொறுப்பேற்க அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

அமைச்சராக பொறுப்பேற்க அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்
Updated on
1 min read

சர்வதேச சைக்கிள் தினத்தை முன்னிட்டு தனது அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்றார் மத்திய சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் ஹர்ஷன்வர்தன்.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஹர்ஷவர்தன் இரண்டாவது முறையாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சராகப் பொறுப்பேற்க அவர் அலுவலகத்துக்கு இன்று சைக்கிளில் சென்றார்.

பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று நான் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். என் மீது நம்பிக்கைக் கொண்ட பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மோடி அரசுக்கு நாட்டு மக்களின் உடல்நலன் மீது அதீத அக்கறை இருக்கிறது. நான் எனது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகாலையில் ஒரு ட்வீட்டை பதிவிட்ட ஹர்ஷவர்தன், இன்று சர்வதேச சைக்கிள் தினம்.. சைக்கிள் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு எனப் பதிவிட்டிருந்தார். மேலும், சைக்கிள் ஓட்டுவது எளிமையான உடற்பயிற்சி. சைக்கிள் அனைவராலும் வாங்கக்கூடிய வாகனம். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வாகனம் எனக் குறிப்பிட்டு சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள் பலவற்றைப் பகிர்ந்திருந்தார்.

மருத்துவர் ஹர்ஷவர்தனுக்கு மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத் துறை தவிர, அறிவியல் தொழில்நுட்பத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அவர் இதே துறைகளை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in