Last Updated : 25 Jun, 2019 12:00 AM

 

Published : 25 Jun 2019 12:00 AM
Last Updated : 25 Jun 2019 12:00 AM

காங்கிரஸ் கூட்டணியை தொடர்வது குறித்து குமாரசாமியுடன் தேவகவுடா தீவிர ஆலோசனை

கர்நாடகாவில் கடந்த ஓராண்டாக காங்கிரஸ் ஆதரவுடன், மஜதவை சேர்ந்த குமாரசாமி ஆட்சி செய்து வருகிறார். இந்த ஆட்சியில் அமைச்சரவை பங்கீடு உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் - மஜத இடையே அதிருப்தி ஏற்பட்டது. இருப்பினும் காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டன. அதில் இரு கட்சிகளும் படுதோல்வி அடைந்ததால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்ப மொய்லி, முனியப்பா உள்ளிட்டோர் காங்கிரஸின் தோல்விக்கு மஜதவே காரணம் என பகிரங்கமாக விமர்சித்துள்ளனர். இதே போல மஜத தேசிய தலைவர் தேவகவுடா, அமைச்சர் ஜி.டி.தேவகவுடா ஆகியோர் காங்கிரஸார் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை, கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வீரப்ப மொய்லி, “கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமியும், அமைச்சர்களும் எவ்வித ஆக்கப்பூர்வ பணிகளிலும் ஈடுபடவில்லை. வளர்ச்சித் திட்டங்கள், நலப்பணிகளில் அக்கறை காட்டாமல் இருக்கின்றனர். இந்த கூட்டணி ஆட்சியால் எந்த பலனும் ஏற்படவில்லை. குமாரசாமியின் கிராம தரிசனம் நிகழ்ச்சி 5 நட்சத்திர விடுதியின் வசதிகளுடன் வலம் வருவது போல இருக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதற்கு மஜத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா முதல்வர் குமாரசாமியை நேற்று பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி ஆட்சிக்கு எதிராக சித்தராமையா, வீரப்ப மொய்லி, முனியப்பா ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸின் தோல்விக்கு மஜத தான் காரணம் என்றும் கூறியுள்ளனர். இனியும் காங்கிரஸுடனான கூட்டணியில் தொடரலாமா? என அவர் ஆலோசித்ததாக தெரிகிறது.

முன்னதாக தேவகவுடா, “மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. விரைவில் தேர்தல் வரலாம். இனி எக்காலத்திலும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். கூட்டணி ஆட்சி தவறான படிப்பினைகளை எனக்கு கற்று தந்துள்ளது. காங்கிரஸ் தான் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பியது. காங்கிரஸ் கூட்டணியில் உறுதியாக இருந்தால் மஜத வலுவான ஆட்சி வழங்கத் தயார்” என கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x