

ஆந்திராவில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, போலீஸாருக்கு வார விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள 176 சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது.இதில் சட்டப்பேரவையில் 151 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வென்றது. மக்களவையில் 25 இடங்களையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். தற்போது அவர் சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் ‘ஆஷா' ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை 7,000 ரூபாய் அதிகரித்துள்ளார். இதன் மூலம் அவர்கள் இனி 10,000 ரூபாய் ஊதியம் பெற உள்ளனர்.
‘ஒய்.எஸ்.ஆர் பரோசா’ என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ. 12,500 வழங்கும் திட்டத்தையும் ஆந்திர அரசு அமல்படுத்த உள்ளது. பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஊர்காவல் படையினரின் ஊதியத்தை அதிகரிக்கவும் ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது.
மேலும், ஆந்திர மாநில பேருந்து போக்குவரத்து கழகத்தை (ஏ.பி.எஸ்.ஆர். டி.சி) அரசுத் துறையாக மாற்றவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி படிப்படியாக மதுவிலக்கு உள்ளிட்ட திட்டங்களையும் அவர் செயல்படுத்தவுள்ளார்.
இதுமட்டுமின்றி இதுவரை இல்லாத அளவு அம்மாநிலத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அரசில் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் 5 துணை முதல்வர்கள் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் பணிபுரியும் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் முடிவையும் அம்மமாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எடுத்துள்ளார்.
இதுகுறித்து அம்மாநில காவல்துறை டிஜிபி கவுதம் சாவங் கூறியதாவது:
காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என முதல்வர் முடிவெடுத்துள்ளார். இதற்காக சிறப்பு கமிட்டியின் மூலம் மொத்தம் 19 மாடல் விடுமுறை முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவகையில் செயல்படுத்தப்புடும்.
அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப இது முடிவு செய்யப்படும். தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை விடுமுறை வழங்கப்படும. இதன் மூலம் மன அழுத்தங்களில் இருந்து அவர்கள் விடுபட ஏதுவாகும். காவலர்கள் பூரண உடல்நலத்துடன் பணியாற்ற இந்த திட்டம் பேருதவியாக இருக்கும். இந்த வார விடுமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.