

கர்நாடக மாநிலம், ஆர்கல்குட் தாலுக்காவில் உள்ள ஹூலிகல் கிராம தலித் மக்கள் முடிவெட்டிக் கொள்ள, ஷேவிங் செய்து கொள்ள தங்கள் கிராமத்திலிருந்து 8 கிமீ தூரம் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்தக் கிராமத்தில் முடிவெட்டுபவர்கள் இல்லை என்பதல்ல, தலித் வீடுகளுக்கு வந்தோ, தலித்துகளுக்கோ அவர்கள் முடிவெட்டத் தயாராக இல்லை என்பதே இந்த அவலத்துக்குக் காரணம்.
“தலித்துகள் ஆர்கல்குட் அல்லது கோணனூர் செல்ல வேண்டும் முடிவெட்டிக் கொள்ள. இளம் வயதினருக்குப் பரவாயில்லை, ஆனால் வயதானவர்கள் 8 கிமீ தூரம் செல்ல முடியுமா கூறுங்கள்?” என்கிறார் இந்தக் கிராமத்தின் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் பிரதாப்.
தலித்துகளுக்கு யாரும் முடிவெட்டுதல், ஷேவிங் போன்றவற்றைச் செய்ய கூடாது என்ற தடை உத்தரவு உள்ளதால் இங்கு உள்ள இளைஞர் ஒருவர் வெளியிடத்திலிருந்து முடிவெட்டுபவர் ஒருவரை அழைத்து வர நேரிட்டுள்ளது.
கிராமத்தில் உள்ள மல்லேஷ் என்ற ஒரு முடிவெட்டும் தொழிலாளி, தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “தலித்துகளுக்கு முடிவெட்டத் தயங்குபவனல்ல நான், ஆனால் இங்கு சலூன் வைக்க இடம் கிடைக்கவில்லை. மேலும் இங்கு சலூன் கடை திறந்தாலும் அவருக்கு வியாபாரம் ஆகாது என்ற நிலையே உள்ளது ஏனெனில் தலித்துகளுக்கு சேவை செய்தால் தாங்கள் கடைபக்கம் வரமாட்டோம் என்று உயர்சாதியினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்” இவருடைய மகன் ஹேமந்த் இவரும் முடிவெட்டுபவர் இவர் ஆர்கல்குட் பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார், இங்கு எல்லாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
ஹூலிகல் கிராமத்தில் சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர், இதில் 150 தலித் குடும்பங்கள் உள்ளன.
“20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பார்பர் இங்க் கடை வைத்திருந்தார், ஆனால் அவர் தலித்துகளுக்கு சேவை செய்ததால் உயர்சாதியினர் அவரை எதிர்த்து கடையை மூட வைத்தனர்” என்று தலித் நல சமூகச் செயல்பாட்டாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ராஜசேகர் என்பவர் தெரிவித்தார். இவர் சமீபத்தில் ஹூலிகல் கிராமப் பஞ்சாயத்துக்கு கிராமத்திற்கு சலூன் கடை வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். பஞ்சாயத்துக்குச் சொந்தமான 6 ஷெட்கள் உள்ளன, இதில் ஒன்றை சலூன் கடைக்கு ஒதுக்கலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
இவர் மேலும் கூறும்போது, இங்குள்ள தலித்துகள் முன்பெல்லாம் வெங்கடரமணா ஆலயத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர். இதனை எதிர்த்து போராடினர். இதனால் சமூகப் புறக்கணிப்பையும் சந்தித்து கடைசியில் கோயிலுக்குள் நுழைந்தனர்.
“சட்டத்தின் உதவியுடன் கிராமத்தின் பொது இடங்களில் சுதந்திரமாக நாங்கள் நடமாட முடிகிறது. ஆனாலும் இன்னும் சலூன் கடைக்கு வழியில்லை. பஞ்சாயத்து எங்களின் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்துவோம். ” என்கிறார் ராஜசேகர்.
இந்தக் கிராமத்தில் சலூன் கடை விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.