

தமிழகத்தில் தண்ணீர்ப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத் ஆவேசமாகப் பேசினார்.
பருவ மழை பொய்த்த நிலையில், தமிழகம் முழுவதும் தண்ணீத் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. குடிநீரை வழங்கிய நீராதாரங்களான ஏரிகள், குளங்கள், கிணறுகளில் பெரும்பாலானவை வற்றிவிட்டன.
இதனால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பல இடங்களில் மக்கள் தினமும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியான திமுகவும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
அதே நேரத்தில் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்த திமுக உறுப்பினர்களின் பேச்சுக்கு பதிலளித்து அதிமுக மக்களவைத் தலைவரும் தேனி எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் மக்களவையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
''என்னுடைய சக உறுப்பினர்கள், தற்போதைய குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து, தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.
பருவ மழை பொய்த்தது, நீராதாரங்கள் வறண்டன, முதன்மையாக இந்தக் காரணங்களால்தான் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் தவறான கூற்றுகளை முன்வைக்கின்றன. தமிழக அரசின் ஒரே பிரதிநிதி நான். நான் ஒற்றை ஆள், ஆனால் அவர்களிடம் (திமுக கூட்டணி) 37 உறுப்பினர்கள் உள்ளனர்.
தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க தமிழக அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த துல்லியமான தகவல்கள் என்னிடம் உள்ளன. வேண்டுமெனில் அதை அவர்களுக்குக் கொடுக்கிறேன்.
அவர்களுக்கு விருப்பம் இருந்தால், அந்தத் தரவுகளை அவர்கள் நடத்தும் ஊடகங்களில் வெளியிடட்டும். அவர்களுக்கு ஊடக ஆதரவு உள்ளது. எந்தத் தகவலையும் மறைக்காமல், அனைத்தையும் அவர்களின் ஊடகங்களில் வெளியிடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் தண்ணீப் பிரச்சினையைத் தீர்க்க ஏராளமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். நான் தவறான தகவல் எதையும் அளிக்கவில்லை''.
இவ்வாறு பேசினார் ரவீந்திரநாத்.