Last Updated : 19 Jun, 2019 02:47 PM

 

Published : 19 Jun 2019 02:47 PM
Last Updated : 19 Jun 2019 02:47 PM

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு: மாநில தலைவர், செயல்தலைவர் மட்டும் நீடிப்பு: தலைமையிடம் திடீர் முடிவு

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பமான சூழல் நீடித்து வந்ததைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் கமிட்டியைக் கலைத்து கட்சி தலைமையிடம் இன்று அதிரடியாக உத்தரவிட்டது.

 

அதேசமயம், மாநிலத் தலைவர், செயல்தலைவர் மட்டும் தொடர்ந்து செயல்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். இந்த சந்திப்பு நடந்த சில மணிநேரத்தில் இந்தஅறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்கக்கூறி காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.

 

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு குறைவான எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தாலும், அந்த கட்சியின் தலைவர் எச்.டி.குமாரசாமிக்கு முதல்வர் பதவி தர காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தது. ஆனால், இந்த செயல் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களுக்கு பிடிக்கவி்லலை எனக் கூறப்படுகிறது.

 

இதனால், முதல்வர் ஹெச்.டி. குமாரசாமியை மறைமுகமாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர், நீங்கள் முதல்வர் இல்லை, சித்தராமையாதான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனால் குமாரசாமி மிகுந்த மனஉளைச்சலில் இருந்துவந்தார். இதுதொடர்பாக பல்வேறு கூட்டங்களிலும் வேதனையுடன் பகிர்ந்துவந்தார்.

 

இதற்கிடையே சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் இரு கட்சியினருக்கும் இடையே ஒற்றுமையின்மையால் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது.  இந்த தோல்விக்குப்பின் இரு கட்சியினரிடையே மோதல் தீவிரமாகி வந்தது.

 

இந்நிலையில், நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியின் உள்மட்டத் தலைவர்களுக்கும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. இதையடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை கலைப்பதாக இன்று காங்கிரஸ் கட்சி இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் மற்றும் பொதுச்செயலாளருமான கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், " கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்படுகிறது. கட்சியின் தலைவர், செயல்தலைவர் மட்டும் மாற்றப்படால் தொடர்ந்து நீடிப்பார்கள் " எனத் தெரிவித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x