

வேலை நேரத்தில், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வழியை அமித் ஷா பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது. குறைந்த விடுப்புகளும், நீண்டநேரப் பணியும் புதிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தாரக மந்திரமாக உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது பதவிக்காலம், கடந்த டிசம்பர் 2008 முதல் ஜூலை 2012 வரை இருந்தது. அப்போது அவர் அலுவலக நேரம் தொடங்குவதற்கு முன்பாகவே காலை 9 மணிக்கு வரும் வழக்கம் இருந்தது.
இந்தவகையில், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவும் காலை 9.30 மணிக்கு அலுவலகம் வந்து விடுகிறார். இத்துடன் தம் அதிகாரிகளுடனான அன்றாட ஆலோசனைகளின் முதல் கூட்டத்தை அடுத்த அரைமணி நேரத்தில் தொடங்கி விடுகிறார். இதனால், உள்துறை அமைச்சக அதிகாரிகள் தம் அமைச்சருக்கு முன்பாக அலுவலகம் வரவேண்டியுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ''நாடு முழுவதிலும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக அமலாக்குவதில் அமித் ஷா அதிக கவனம் செலுத்துகிறார். இதில், குறிப்பாக அவரது கவனம் ஜம்மு-காஷ்மீர் மீது அதிகம் உள்ளது. இதனால், நம்துறையின் இணை, துணை செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதேநிலை, ப.சிதம்பரம் இப்பதவியில் இருந்தபோது நீடித்தது'' எனத் தெரிவித்தனர்.
இதேபோல் அலுவலக நேரம் மாலை 6 மணிக்கு முடிந்த பின்பும் 7.30 முதல் 8 மணிக்கு பின்பே அமித் ஷா தன் வீடு திரும்புகிறார். அரசு விடுமுறை நாளான ரம்ஜான் பண்டிகை அன்றும் பணியாற்றி இருந்தார். வார இறுதி நாளான சனிக்கிழமைகளிலும் பெரும்பாலும் அமித் ஷா பணிநாளாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக, அமித் ஷாவிற்காக அவரது அதிகாரிகளும் அலுவலகம் வந்து விடுகின்றனர். இந்த நிலையால், உள்துறை மத்திய இணை அமைச்சர்களான ஜி.கிஷண் ரெட்டி மற்றும் நித்தியானந்த் ராய் ஆகியோரும் அமித் ஷாவின் அலுவலக நேரத்தை கடைபிடிக்க வேண்டியதாகி விட்டது.
கடந்த ஆட்சியில் தனக்கு முன்பாக இருந்த ராஜ்நாத் சிங்கைப் போல் அன்றி அமித் ஷா, மதிய உணவையும் வீட்டில் இருந்து வரவழைத்து உண்கிறார். முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் மதிய உணவிற்குச் செல்லும்போது மீதி நேரத்தில் பெரும்பாலும் வீட்டின் அலுவலகத்தில் இருந்து பணியாற்றும் வழக்கம் இருந்தது.
முக்கிய அதிகாரிகளின் மற்றும் அரசியல் கூட்டங்களைக் கூட தன் வீட்டிலேயே ராஜ்நாத் நடத்தி விடுவது உண்டு எனக் கூறப்படுகிறது. ஆனால், புதிய அமைச்சரான அமித் ஷா நார்த்பிளாக் அலுவலகத்தில் உள்ள அறை எண் 104-ல் அக்கூட்டங்களை நடத்துகிறார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உள்துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது, ''அமித்ஷா வின் பணிகள் முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை நினைவுபடுத்துகிறது. அவரது பதவிக்காலத்தில் தான் முதன்முதலாக விரல்ரேகைப் பதிவு இயந்திரம் நம் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இதில் தானும் அதைப் பின்பற்றி பதிவு செய்து வந்தார் சிதம்பரம்'' எனத் தெரிவித்தனர்.