

தெலங்கானா தனி மாநிலமாக உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மக்களுக்கும் அவர் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014, ஜூன் 2ந்தேதி புதிய மாநிலமாக தெலங்கானா உதயமானது. இது இந்தியாவின் 29வது மாநிலம் ஆகும். புதிய மாநிலமான தெலங்கானாவின் முதல் முதல்வராக சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார்.
மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
“தெலங்கானா மாநிலம் உதயமான தினத்தைக் கொண்டாடும் வேளையில், அந்த மிகச்சிறந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
கடின உழைப்பாளிகளைக் கொண்ட மாநிலம் என்ற பெருமையைப் பெற்ற தெலங்கானா மக்கள், நாட்டின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எனதருமை சகோதார, சகோதரிகளுக்கும் நல்வாழ்த்துகள்.
அறிவியல் முதல் விளையாட்டு, கல்வி முதல் தொழில் துறை வரை, ஆந்திரப் பிரதேசத்தின் பங்களிப்பு மிகச் சிறப்பானதாகும். வரும் காலங்களில் அந்த மாநிலம் சிறப்பாக வளமடைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் தனது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.