

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், ‘தேஜ் சேனா’ என்ற பெயரில் ஆன்லைன் மூலம் தொண்டர்களை இணைக்க புதிய அமைப்பு ஒன்றை தொடங்குகிறார்.
பிஹார் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தண்டனை அனுபவித்து வருகிறார். இதனால் கட்சிப் பொறுப்புகளை அவர் சார்பாக அவரது இளைய மகன் தேஜஸ்வி கவனித்து வருகிறார்.
லாலு வழக்கமாக போட்டியிடும் சரண் மக்களவைத் தொகுதியில் இம்முறை தேஜ் பிரதாபின் முன்னாள் மாமனார் சந்திரிகா ராய்க்கு தேஜஸ்வி வாய்ப்பு கொடுத்தார். இது தேஜ் பிரதாபுக்கு பிடிக்கவில்லை. அப்போது முதல், அண்ணன் - தம்பி இடையே மோதல் போக்கு தொடங்கியது.
3 மாதங்களுக்கு முன்பு ‘லாலு - ரப்ரி மோர்ச்சா’ என்ற பெயரில் கட்சியை தொடங்கி மக்களவைத் தேர்தலில் அவர் களமிறங்கினார். மக்களவைத் தேர்தலில் பிஹாரில் ஆர்ஜேடி கட்சி படுதோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சித் தலைமையை கைபற்ற இரு சகோதரர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்தநிலையில் கட்சி தொண்டர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில், தேஜ் பிரதாப் யாதவ் கட்சிக்காக புதிய அமைப்பு ஒன்றை நாளை தொடங்குகிறார். ‘தேஜ் சேனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆன்லைன் அமைப்பு செயலி வடிவில் ‘மாற்றத்தை விரும்புவோருக்கான தளம்’ என்ற இலக்குடன் தொடங்கப்படுகிறது. தமது ஆதரவாளர்களை ஆன்லைனில் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக இதனை அவர் தொடங்கியுள்ளார்.