Published : 26 Jun 2019 12:14 PM
Last Updated : 26 Jun 2019 12:14 PM

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம், 3 ஆண்டுகள் சிறை: மோட்டார் வாகனச் சட்டத்தில் வருகிறது புதிய திருத்தம்

மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிமுறைகளை கடுமையாக மாற்றும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே அமலில் உள்ள மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு விதிமுறைகள் அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. அந்த சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்வதற்கான சட்ட மசோதா முந்தைய ஆட்சியின் போது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு எழவே சிக்கலைச் சந்தித்தது.

ஆட்சிக் காலம் முடிந்து மக்களவை கலைக்கப்படவே, அந்த மசோதா காலாவதியாகி விட்டது. இந்த நிலையில், சாலைப் பாதுகாப்பு ஆர்வலர்களின் ஆலோசனைகளோடு அதே மசோதாவானது சில திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இது புதிய மசோதா என்பதால் மீண்டும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை அதிகரித்து வசூலிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், வசூலிக்கப்படும் அபராதம் 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் 100ல் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும். 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை மீறி வாகனம் ஓட்டுவோருக்கான அபராதத் தொகை 500- ல் இருந்து பத்தாயிரம் ரூபாய் அதிகரித்து வசூலிக்கப்படும்.

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இனிமேல் 2 ஆயிரம் ரூபாய்க்கு பதில் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வேகமாக வாகனத்தை ஓட்டுதல், பந்தயத்தில் ஈடுபடுதல் போன்ற விதிமீறல்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதிக அளவும் பாரம் ஏற்றினால்  டன்னுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்கப்படும். சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கவும் புதிய சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த புதிய மசோதா அடுத்த சில தினங்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x