

கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை பாஜக தேசியத் துணைத் தலைவர் எடியூரப்பா நேற்று பெங்களூரில் சந்தித்து பேசினார்.
அந்த மாநில முதல்வர் சித்தராமையா மீது அர்க்காவதி நில ஒதுக்கீடு விவகாரத்தில் வழக்கு தொடுப்பது குறித்து பேசியதாக தகவல் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் அர்க்காவதி லே அவுட்டில் நிலம் ஒதுக்கீடு செய்ததில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதில் முதல்வர் சித்தராமையாவிற்கு முக்கிய பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பின. இதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக தேசியத்துணைக் தலைவருமான எடியூரப்பா, ஆளுநர் வாஜூபாய் வாலாவை வியாழக்கிழமை சந்தித்து பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தற்போதைய கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சித்தராமையா மீது வழக்கு?
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. ஆளுநரும், நானும் பாஜகவை சேர்ந்தவர்கள். ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் சந்திக்கக் கூடாதா? முந்தைய பாஜக ஆட்சியில் காங்கிர ஸார் அப்போதைய ஆளுநர் பரத் வாஜை அடிக்கடி சந்தித்து பேசினார் கள்.அதே போல இப்போது நாங்கள் சந்தித்து பேசுகிறோம். இதனை அரசியல் நோக்கத்தோடு பார்க்கக்கூடாது” என்றார்.
அப்போது, 'அர்க்காவதி லே அவுட் நில மோசடி புகார் விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடுப்பது குறித்து பேசியதாக கூறப்படுகிறதே?' என எடியூரப்பாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடியூரப்பா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநர் வாஜூபாய் வாலாவை எடியூரப்பா சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸார் அதிருப்தி
இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஷ்வர் கூறியதாவது,''எதிர்க்கட்சியினர் என்கிற அடிப்படையில் பாஜகவினர் ஆளுநரை சந்தித்து பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் ஆட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதை ஏற்க முடியாது. ஆளுநர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதனை ஒரு குறிப்பிட்ட கட்சியின் நலனுக்காக பயன்படுத்தக்கூடாது'' என்றார்.