Last Updated : 25 Jun, 2019 12:00 AM

 

Published : 25 Jun 2019 12:00 AM
Last Updated : 25 Jun 2019 12:00 AM

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட 18 அமைச்சர்கள் குடிநீர் வரி கட்டவில்லை: ஆர்டிஐ கேள்விக்கு மும்பை மாநகராட்சி பதில்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட 18 அமைச்சர்கள் குடிநீர் வரி கட்டவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மும்பை மாநகராட்சி பதில் அளித்துள்ளது.

அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘என்ஜிஓ அதிகார் பவுண்டேஷன்’, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பம் அளித்திருந்தது. அதில், மகாராஷ்டிராவில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்தாத அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், எத்தனை ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை, எவ்வளவு தொகை பாக்கி உள்ளது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு மும்பை மாநகராட்சி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தங்கியுள்ள ‘வர்ஷா’ அரசு பங்களாவுக்கு குடிநீர் வரியாக 7 லட்சத்து 44 ஆயிரத்து 981 ரூபாய் பாக்கி உள்ளது. இந்த பங்களா மும்பை மலபார் ஹில் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் சுதீர் முன்கன்டிவர், பங்கஜ முண்டே, ராம்தாஸ் கதம் உட்பட 17 அமைச்சர்கள் தங்கியுள்ள பங்களாக்களுக்கும் கடந்த 2001-ம் ஆண்டு முதல் குடிநீர் வரி செலுத்தப்படவில்லை.

இவ்வாறு மும்பை மாநகராட்சி பதில் அளித்துள்ளது.

தற்போது வீடுகளுக்கு குடிநீர் வரியாக ஆயிரம் லிட்டருக்கு ரூ.5.22 வசூலிக்கப்படுகிறது. குடிசைப் பகுதிகளுக்கு ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு ரூ.4.33 வசூலிக்கப்படுகிறது. தற்போது குடிநீர் வரியை 2.48 சதவீதம் உயர்த்திக் கொள்ள மும்பை மாநகராட்சிக்கு நிலைக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுப்பணித் துறை விளக்கம்முதல்வர் பட்னாவிஸ் உட்பட அமைச்சர்கள் 18 பேர் குடிநீர் வரி செலுத்தாதது குறித்து மகாராஷ்டிர பொதுப் பணித் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கியுள்ள அரசு பங்களாக்களுக்கான குடிநீர் வரி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதமே செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கு முன்னர் செலுத்திய குடிநீர் கட்டணத்துக்கும் இந்த ஆண்டு மே மாதம் செலுத்திய குடிநீர் கட்டணத்துக்கும் வித்தியாசங்கள் இருந்ததால், ‘நிலுவை தொகை இல்லை’ என்று அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்தத் தொகையில் உள்ள வித்தியாசங்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் பாக்கி இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

மேலும், குடிநீர் கட்டணம் செலுத்தும் போது, அரசு பங்களாக்களின் பெயர்களில்தான் ரசீது வழங்கப்படும். யாருடைய தனிப்பட்ட பெயரிலும் ரசீது வழங்குவதில்லை. எனவே, தனிப்பட்டவர்கள் குடிநீர் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர் என்று கூறுவது சரியாகாது. இவ்வாறு பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் வரி கட்டாவிட்டால் கூடுதல் வரி

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றவர்கள், சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்துக்கு ஆண்டுக்கு இரண்டு முறை தண்ணீர் வரி செலுத்த வேண்டும். இந்த வரி, சென்னை மாநகராட்சிக்கு செலுத்தும் சொத்து வரியில் 7 சதவீதம் ஆகும். மாநகராட்சிக்கான சொத்து வரி 30 சதவீதம் என்று கணக்கிடப்படுகிறது. அதில், மாநகராட்சிக்கு 23 சதவீதம், குடிநீர் வாரியத்துக்கு 7 சதவீதம் என்று பிரித்து வசூலிக்கப்படுகிறது.

இக்குடிநீர் வரி, முதல் ஆறு மாதங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 3.5 சதவீதமாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு பிப்ரவரி மாதம் 3.5 சதவீதமாகவும் வசூலிக்கப்படுகிறது. உரிய மாதத்தில் வரி செலுத்தாவிட்டால், கூடுதல் வரி 12 சதவீதம் வசூலிக்கப்படும். உதாரணமாக குடிநீர் வரி ரூ.300 கட்ட வேண்டும். அதைச் செலுத்தாவிட்டால், கூடுதல் வரி ரூ.46 சேர்த்து ரூ.346 செலுத்த வேண்டும். அதையும் செலுத்தாவிட்டால், ரூ.346-க்கு 12 சதவீதம் கூடுதல் வரி செலுத்த நேரிடும். அதுபோல எவ்வளவு காலம் செலுத்தவில்லையோ அதற்கேற்ப கூடுதல் வரி வசூலிக்கப்படும். இதுதவிர வீட்டு உபயோகத்திற்கான குடிநீர் கட்டணமாக ஒவ்வொரு மாதமும் ரூ.50 வசூலிக்கப்படுகிறது.

இதர உபயோகத்திற்கு ஏற்ப இக்கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x