

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ‘வாயு‘ புயல வலுவிழந்தததால் பெரும் பாதிப்பில் இருந்து குஜராத் தப்பிய நிலையில் அடுத்த சில தினங்களில் அது மீண்டும் குஜராத் நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் உருவான வாயு புயல் கடந்த 13-ம் தேதி குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கடலோர பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குஜராத் முழுவதும் கடந்த 13-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. போர்பந்தர், டையூ, பாவ்நகர், கேசாத், கண்ட்லா விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் 400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 52 குழுக்கள் குஜராத்தில் முகாமிட்டன. கடலோர காவல் படையும் முப்படைகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் கோமதி, ஐஎன்எஸ் தீபக் கப்பல்களில் குஜராத்துக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. மேலும் கடற்படையை சேர்ந்த 7 விமானங்களும் 3 ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
எனினும் புயல் திசை மாறி மீண்டும் கடலுக்கு திரும்பியது. புயல் வலுவிழந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பெரும் பாதிப்பில் இருந்து குஜராத் தப்பியது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திரும்ப பெறப்படுவதாக முதல்வர் விஜய் ரூபானி அறிவித்தார்.
இந்த நிலையில் அரபிக்கடலில் வலுவிழந்த நிலையில் காணப்படும் வாயு புயல் மீண்டும் குஜராத் கடலோரத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் எம்.ராஜீவன் கூறுகையில், ‘‘வாயு புயல், மீண்டும் தனது திசையை மாற்றி, வரும் 17 -18 தேதிகளில் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தை தாக்கக்கூடும். முன்பு மிக அதிதீவிர புயலாக இருந்தது.
எனிதும் தற்போது அந்த புயலின் தன்மை குறையக்கூடும். குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் வேககெடுத்து சூறாவளி புயலாக தாக்கக்கூடும். எனினும் அடுத்த சில நாட்களுக்கு பிறகு தான் புயலின் வேகம் குறித்த முழுமையான தகவல்கள் தெரிய வரும்’’ எனக் கூறினார்.
இதையடுத்து புயலை எதிர்கொள்ள மீண்டும் நடவடிக்கைகளை குஜராத் அரசு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.