பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு

பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு
Updated on
1 min read

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுவின் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால், மத்திய உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா ஏற்ற நிலையில், அவர் வகித்து வந்த கட்சித் தலைவர் பதவி ஜே.பி.நட்டாவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமித் ஷா விரைவில் பாஜக தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்பட்டது. அதனால்தான் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. கடந்த மோடி அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்த நட்டா இந்த முறை அமைச்சரவையில் இல்லை என்று சொல்லப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தின் பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஜே.டி நட்டா, பாஜக மூத்த தலைவர்களின் அன்பையும், மரியாதையையும், நம்பிக்கையையும் பெற்றவர். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கையைப் பெற்றவர்.

56 வயதான ஜே.பி. நட்டா இமாச்சலப் பிரதேச பாஜக அரசிலும் அமைச்சராக இருந்தவர். கட்சியின் ஆட்சிமன்றக் குழுவிலும் உறுப்பினராக இருந்து வருகிறார். எந்தவிதமான சிறிய விமர்சனத்துக்கும் உள்ளாகாதவர் என்பதால் தேசியத் தலைவர் பதவிக்கு நட்டா தேர்வு செய்யப்படுவார் என்று கருதப்பட்டது.

மேலும், பாஜக தலைவர் பதவியை நட்டாவுக்கு வழங்கினால் சிறப்பாகச் செயல்படுவார் என்று கட்சியின் ஆட்சிமன்றக்குழுவில்  உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர பாஜக பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் மற்றும் துணை துணைத்தலைவர் ஓ.பி. மாத்தூர் ஆகியோரும் பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான பெயர்களில் பரிசீலிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுவின் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ''அமித் ஷா உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற நிலையில், பாஜக தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறிவந்தார். அதன்படி, ஜே.பி.நட்டா பாஜகவின் தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in