ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது, ஜனநாயக விரோதம்: சீதாராம் யெச்சூரி கண்டனம்

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது, ஜனநாயக விரோதம்: சீதாராம் யெச்சூரி கண்டனம்
Updated on
2 min read

நாடாளுமன்றத்துக்கும், நாட்டில் உள்ள அனைத்துச் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, ஜனநாயகத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் விரோதமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு தேசம், ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் இருக்கும் கட்சியின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

இதற்காக டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயம் மட்டுமல்லாமல் 2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இவை குறித்து விவாதிக்கவும், பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசவும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, தெலுங்குதேசம், திரிணமூல் காங்கிரஸ்,  பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள்  புறக்கணித்துள்ளன.

இந்தசூழலில் நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் என்பது அரசியமைப்புச்சட்டம் வழங்கி உள்ள அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரத்தையே சேதப்படுத்துவதாகும்.

சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்சினைகள் தவிர்த்து இந்த திட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. நாடாளுமன்ற ஜனநாயக முறையின் வேரினை பாதிக்கும் என்ற உண்மையின் அடிப்படையில் எங்களின் எதிர்ப்பு இருக்கிறது.

அரசமைப்புச்சட்டம் பிரிவு 75(3)ன்கிழ் மக்களவைக்கு அமைச்சரவை குழுவம், அதேபோல அரசமைப்புப் பிரிவு 164(1)ன்கீழ், சட்டப்பேரவைக்கும், அமைச்சரவைக் குழுவுக்கும் கூட்டுப்பொறுப்பு இருக்கிறது.

அரசமைப்புச் சட்டப்படி ஒரு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்தாலோ, நிதி மசோதாவில் பெரும்பான்மையை இழந்தாலோ அந்த அரசு ராஜினாமா செய்ய கடமைப்பட்டுள்ளது. எந்தவிதமான மாற்று அரசும் பதவி ஏற்க முடியாது. அரசு கலைக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மக்களவையோ அல்லது சட்டப்பேரவையோ கலைக்கப்படாலாமல், நம்பிகத்தன்மையை இழக்காமல் இருந்தால், அரசமைப்புச்சட்டம் பிரிவு 83(2), பிரிவு172(1) ஆகியவற்றின் கீழ் 5 ஆண்டுகள் செயல்பட வேண்டும்.

மக்களவை அல்லது மாநிலச் சட்டப்பேரவையின் வாழ்நாளை குலைக்க நேர்ந்தால், அது அரசமைப்புச் சட்டத்துக்கும் விரோதமானது, ஜனநாயகத்துக்கும் விரோதமானது. தாங்கள் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் முழுமையாக 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

அரசமைப்புச் சட்டத்தை திருத்தி அதன் மூலம் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்தலாம் என்று நிதிஆயோக் அமைப்பு ஆலோசனை அளித்துள்ளது.

செயற்கையாக எந்தவிதமான முயற்சிகள் செய்து ஒரே நேரத்தில் சட்டப்பேரைவக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சித்தால் அதற்கு முழுமையாக எதிர்ப்போம். இந்த திட்டம், ஏற்கனவே இருக்கும் நாடாளுமன்ற ஜனநாயக முறையையும் சேதப்படுத்திவிடும்

இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in