

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேனைச் சந்தித்தார். அப்போது அவர் மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி ராசி மணலில் தமிழகம் அணை கட்ட அனுமதி வழங்க வலியுறுத்தி மனு அளித்தார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மசூத் உசேனிடம் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது:
''கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் சுமார் 25 லட்சம் ஏக்கர் சாகுபடி நிலப்பரப்பு பாலைவனமாகும். சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 25 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும்.
நிலத்தடி நீர் அழிந்து போகும். தமிழக உணவு உற்பத்தியில் 40 சதவீதம் முற்றிலும் முடக்கப்படும். இந்நிலையில் தமிழகம் உபரி நீரை ஆண்டு தோறும் 30 முதல் 100 டிஎம்சி தண்ணீரை கடலிலே கலக்கச் செய்வதாகவும், தமிழகம் சமவெளிப் பகுதி என்பதால் அணை கட்ட இயலாது எனவும் குற்றம் சாட்டும் கர்நாடகம், ஏற்கெனவே சட்ட விரோதமாக 6 அணைகளைக் கட்டியுள்ளது.
தற்போது கர்நாடக எல்லையின் இறுதிப் பகுதியான மேகேதாட்டுவில் அணை கட்டி தமிழகம் நோக்கி வரும் உபரி நீரைத் தடுத்து உரிய தண்ணீரை தமிழகத்திற்கே வழங்க உள்ளதாக பொய் பிரச்சாரம் செய்கிறது. தமிழகம் நோக்கி வரும் தண்ணீரை தடுக்க சட்டப்படி உரிமை இல்லாத கர்நாடகம், தமிழக நலனுக்காக எனக் காரணம் காட்டி நியாயப்படுத்த முயற்சிக்கிறது.
தமிழக நலன் மீது அக்கறையோடு கர்நாடகம் பேசுவது உண்மையாக இருக்குமேயானால் தனது எல்லையின் இறுதியில் மேகேதாட்டுவில் சட்ட விரோதமாக கர்நாடகம் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும். அதிலிருந்து தமிழக எல்லையான காவிரியின் இடது கரையில் கீழ்நோக்கி 42 கி.மீ. தொலைவில் தமிழக கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ராசி மணலில் தமிழகத்திற்குள் ஓடும் உபரி நீரைத் தடுத்து அணைகட்டி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள தமிழகத்திற்கு முழு சட்டஉரிமை உள்ளது.
ராசிமணலில் அணையைக் கட்டி உபரி நீரைத் தேக்கி, மேட்டூர் அணை நீர்மட்டம் குறையும் போது தண்ணீரை விடுவித்து மேட்டூர் அணை மூலமே பாசனம் பெருகலாம். இதற்கு, தமிழகம் அணை கட்ட கர்நாடகம் ஒத்துழைக்க முன்வர வேண்டும். காவிரியின் வலது கரை முழுவதும் கர்நாடகாவிற்கு சொந்தம் என்பதால் மின்சாரத்தை கர்நாடகம் உற்பத்தி செய்துகொள்ளலாம்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேகேதாட்டு மீது மத்திய அரசின் செயல் கண்துடைப்பா?
இந்தச் சந்திப்பிற்குப் பின் அது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, ''மேகேதாட்டு அணை கட்ட அனுமதியளிக்கும் முழு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் ஆணையத்திற்கே அளித்துள்ளதாகவும், கர்நாடகாவின் விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலனை செய்வது கண்துடைப்பானது எனவும் மசூத் உசேன் கூறி எங்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
அடுத்த கூட்டத்தை கர்நாடகாவில் நடத்தி அங்கும் ஒரு அலுவலகம் தொடங்குவோம். ராசிமணலில் அணைகட்ட தமிழக அரசு விண்ணப்பித்தால் அதை பரிசீலனை செய்வோம் எனவும் உசேன் தகவல் அளித்தார்'' எனத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, சென்னை மண்டலத் தலைவர் வேளச்சேரி குமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் விகேவி துரைசாமி, மருத்துவர் ஆனந்த் ஆகியோரும் இருந்தனர். இன்று டெல்லியில் மீண்டும் காவிரி ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது.