

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஒருநாடு ஒரே தேர்தல் முறைக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஒருநாடு ஒரே தேர்தல் அமல்படுத்தும் முறையை இடதுசாரி கட்சிகள் எதிர்த்தன. 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 21 கட்சிகளின் பிரநிதிகள் பங்கேற்றனர்.
சில கட்சிகள் பங்கேற்காவிட்டாலும் தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடையே கூறும்போது, “இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி இந்த ஒருநாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த முடியும் என்பதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனரே தவிர இந்தக் கருத்தை அவர்கள் எதிர்க்கவில்லை” என்றார்.
இந்தக் கமிட்டியில் யார் யாரெல்லாம் உறுப்பினர்கள் என்று ராஜ்நாத்திடம் கேட்ட போது, “பிரதமர் இதில் முடிவெடுப்பார்” என்றார்.
இடது சாரிகள் இந்தக் கருத்தை ஆதரிப்பதாக ராஜ்நாத் சிங் கூறும் அதே வேளையில், சீதாராம் யெச்சூரி, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒழிக்கச் செய்யும் முயற்சி என்றும் தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.