வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
Updated on
2 min read

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில், வேலையின்மை, விவசாயிகள்  பிரச்சினை உள்ளிட்டவற்றை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்துக்க ட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தினார்கள்.

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் 17-வது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து, பிரதமராக 2வது முறையாக மோடி பதவியேற்றார்.நாளை தொடங்கும் கூட்டத் தொடரில். இடைக்கால சபாநாயகர் விரேந்திர குமார் எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

2 நாட்கள் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின் வருகிற 19ம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். 20ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்

இதற்கிடையே நாடாளுமன்றத் கூட்டத் தொடருக்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், அதிர் ரஞ்சன் சவுத்ரி, சுரேஷ்  தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் டெஹ்ரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில், " மக்களின் நலனுக்காக கொண்டுவரப்படும் அனைத்து மசோதாக்களையும் நாங்கள் ஒருபோதும் எதிர்க்கமாட்டோம். அதேசமயம், வேலையின்மை சிக்கல், விவசாயிகள் பிரச்சினை, வறட்சி ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீரில் விரைவாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் நடத்திய நிலையில் ஏன் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவில்லை, மத்திய அரசு நிர்வாகம் என்ன செய்ய முயல்கிறது " என குற்றம்சாட்டினார்.

டெஹ்ரிக் ஓ பிரையன் பேசுகையில், " நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், " 16-வது மக்களவையில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.பி.க்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டாமல் வீணாக்கினார்கள். அனைத்துக் கட்சிகளையும், குறிப்பாக எதிர்க்கட்சிகள் நாடாமன்றத்தில் பொறுப்பாக நடந்து இரு அவைகளும் சுமுகமாகச் செயல்பட ஒத்துழைக்க வேண்டும்.

வரும் 19-ம் தேதி மக்களவை, மாநிலங்களவையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். 2022-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டியும், மகாத்மா காந்தியின் 150 ஆண்டு பிறந்தநாள் வருவதையொட்டியும் ஒரு தேசம், ஒரு தேர்தல் குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. 20-ம் தேதி இதுகுறித்து எம்பிகளுடன் பிரதமர் விவாதிப்பார் " எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in