ஓட்டுநர் உரிமத்துக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய அரசு முடிவு

ஓட்டுநர் உரிமத்துக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய அரசு முடிவு
Updated on
1 min read

வாகன ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியான 8-ம் வகுப்பு என்பதை நீக்க மத்திய அரசு முடிவு செய்து திருத்தம் கொண்டுவர உள்ளது.

இதுகுறித்து சாலைப்போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிவிப்பு:

“சமுதாயத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறும் விதமாக, வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை நீக்க, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989, விதி 8-ன் படி போக்குவரத்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், நாட்டில் உள்ள பெரும்பாலான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் முறையான கல்வித்தகுதி பெறவில்லை என்ற போதிலும், எழுதப் படிக்கவும், திறன் பெற்றவர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்து அமைச்சகம் சார்பில், அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், ஓட்டுநர்களுக்கான கல்வித் தகுதியை நீக்குமாறு ஹரியாணா மாநில அரசு வலியுறுத்தியது. இதனைப் பரிசீலித்தபோது, ஓட்டுநர்களுக்கு அவர்கள் சார்ந்த துறையில், உரிய திறன் தேவையே தவிர, கல்வித்தகுதி என்பது தேவையற்றது எனத் தெரிகிறது.

எனவே, ஓட்டுநர் உரிமத்திற்கான கல்வித் தகுதியை நீக்குவதன் மூலம், வேலைவாய்ப்பற்ற ஏராளமானோர் குறிப்பாக நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பயணியர்  மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையில் பற்றாக்குறையாக உள்ள சுமார் 22 லட்சம் ஓட்டுநர் பணி வாய்ப்புகளை ஈடுகட்ட, இந்த முடிவு பேருதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

எனவே, 1989-ம் ஆண்டு மத்திய மோட்டார் வாகனச் சட்ட விதி 8-க்கு திருத்தம் கொண்டு வர மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்''.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in