Last Updated : 27 Jun, 2019 03:57 PM

 

Published : 27 Jun 2019 03:57 PM
Last Updated : 27 Jun 2019 03:57 PM

ஹரியானா காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை:10 குண்டுகள் பாய்ந்தன: ராகுல் கடும் கண்டனம்

ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் இன்று காலை உடற்பயிற்சிக்கூடத்துக்கு செல்லும் வழியில் பட்டப்பகலில் கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

திட்டமிட்டு நடந்ததாக கூறப்படும் இந்த கொலையின்போது, 10 முதல் 12 ரவுண்டுகள் வரை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன என்று போலீஸார் முதல்கட்டமாகத் தெரிவித்துள்ளனர்

ஹரியானாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வருகிறார். அங்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளராக இருந்தவர் விகாஸ் சவுத்ரி.

விகாஸ் சவுத்ரி இன்று காலை வழக்கம் போல், செக்டார் நயன் பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு தனது காரில் சென்று பார்க்கில் காரை நிறுத்தினார். அப்போது சவுத்ரி காரை பின்தொடர்ந்து வந்த இருகார்களில் இருந்து இறங்கிய ஒருகும்பல் சவுத்ரி மீது சராமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

 ஏறக்குறைய 12 குண்டுகள் வரை சுடப்பட்டன. இதில் மார்பிலும், கழுத்திலும் தோள்பட்டையிலும் குண்டு காயம் அடைந்த சவுத்ரி சரிந்து விழுந்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்தபோது, இரு காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பித்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள், சவுத்ரியை அருகில் இருந்த சர்வோதயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்,  அவரைபரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் துணை ஆணையர் ஜெய்வீர் சிங் ரதி கூறுகையில், " கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளின்படி இரு வாகனங்களில் இருந்து இறங்கியவர்கள் இந்த கொலையைச் செய்துள்ளார்கள். 10 முதல் 12 குண்டுகள் சுடப்பட்டதற்கான கேட்ரேஜ்கள் கிடக்கின்றன. கண்காணிப்பு கேமிராவை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். இந்த கொலை மிகவும் தி்ட்டமிட்டு, நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து செய்யப்பட்டுள்ளது. சவுத்ரி எப்போது தனியார் இருப்பார் என்பதை கண்காணித்து இந்த கொலையைச் செய்துள்ளனர். சவுத்ரியின் கழுத்து, மார்புப்பகுதியில் குண்டுகள் பாய்ந்திருந்தன.  உடற்கூறு ஆய்வு முடிந்தபின் உடல் சவுத்ரியின் குடும்பத்தாரிடம ஒப்படைக்கப்பட்டது.

கொலையாளிகளைப் பிடிக்க பல்வேறு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது "எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கொல்லப்பட்டதற்கு தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் ட்விட்டரில் விடுத்த செய்தியில், " பரிதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் விகாஸ் சவுத்ரியை கொலை செய்தது கடும் கண்டனத்துக்குரியது. இது வெட்கப்பட வேண்டிய, மிகவும் துயரமான சம்பவம். ஹரியானாவில் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதை இந்த சம்பவம் காட்டுகிறது. சவுத்ரியின் ஆன்மா சாந்தி அடையும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x