

அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அமைச்சக அதிகாரிகளின் முதல் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் அரசு பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர் களுக்கும் 2020-ம் ஆண்டு முதல் மதிய உணவு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது . இதுதொடர்பாக செலவு நிதிக்குழுவுக்கு அனுப்ப அறிக்கை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. பின்னர், அந்த அறிக்கை மத்திய அமைச்சரவையின் ஒப்பு தலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அடுத்த ஆண்டு முதல் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர் களுக்கும் மதிய உணவு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.4,000 கோடி கூடுதல் நிதி தேவைப்படும் என்று ஆரம்ப கட்டமாக மதிப்பீடு செய்துள் ளோம். இத்திட்டத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புகிறோம். அதன்பிறகு, அரசு பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு அளிக்கும் திட்டம் அடுத்த நிதி யாண்டு முதல் செயல்படுத்தப் படும்.
இது தொடர்பாக மாநில அரசுகளுடன் விவாதிக்கப்படும். தேசிய கல்விக் கொள்கை தொடர் பாக ஆலோசிக்க வரும் 22-ம் தேதி டெல்லியில் மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்து வது பற்றியும் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
நாடு முழுவதும் அரசு பள்ளி களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர், 2007-ம் ஆண்டு 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 12.5 லட்சம் அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் படிக்கும் சுமார் 12 கோடி மாணவர்கள் மதிய உணவுத் திட் டத்தால் பயன்பெறுகின்றனர். 9 மற்றும் 10-ம் வகுப்புக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவ தால் மேலும் பல லட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.