இரு தலைவர்கள் கேரளா பயணம்: குருவாயூரில் பிரதமர் மோடி: வயநாட்டில் ராகுல் காந்தி

இரு தலைவர்கள் கேரளா பயணம்: குருவாயூரில் பிரதமர் மோடி: வயநாட்டில் ராகுல் காந்தி
Updated on
2 min read

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று கேரள மாநிலத்துக்கு பயணம் செய்கின்றனர். பிரதமர் மோடி குருவாயூருக்கும், ராகுல் காந்தி வயநாட்டுக்கும் செல்கின்றனர்.

பிரதமர் மோடி இன்று கொச்சிக்கு இரவு 11.30 மணிக்கு வருகிறார். அங்கு இரவு தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை  தனி ஹெலிகாப்டர் மூலம் குருவாயூருக்குச் செல்கிறார்.

அங்குள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயிலில் நாளை காலை சுவாமி தரிசனம் செய்யும்  பிரதமர் மோடி, அதை முடித்துவிட்டு, குருவாயூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு நண்பகலுக்கு மேல் டெல்லி புறப்படுகிறார்.

அதேசமயம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நண்பகலுக்குப்பின் கோழிக்கோடு வருகிறார்,  அங்கிருந்து தனது மக்களவைத் தொகுதியான வயநாடுக்கு செல்கிறார்.

மக்களவைத் தேர்தலில் வயநாடு, அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேசமயம், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அமேதியில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் தோல்வி அடைந்தார்.

மக்களவைத் தேர்தல் முடிந்தபின், ராகுல் காந்தி வயநாடுக்கு முதல் முறையாக இன்றுதான் செல்கிறார். ஏறக்குறையாக 3 நாள் வயநாட்டில் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், " கேரளாவில் உள்ள வயநாட்டுக்கு இன்று நண்பகல் செல்கிறேன். ஞாயிற்றுக்கிழமை நான் வாக்காளர்களைச் சந்தித்தும், காங்கிரஸ் தொண்டர்களைச் சந்தித்தும் நன்றி தெரிவிக்கிறேன்.

அடுத்த 3 நாட்களில் 15 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இந்த 3 நாட்கள் பயணத்தில் காளிகாவு, நிலமூரம், எடவன்னா, ஆரீகோட் ஆகிய பகுதிகளில் சாலைமார்க்கமாகச் சென்று ராகுல் காந்தி நன்றி தெரிவிக்கிறார்.

இதுகுறித்து முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் கூறுகையில், " மாநிலத்தில் கிடைத்த இந்த வெற்றியுடன் நாங்கள் தேங்கிவிடமாடடோம். எங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, அடுத்த ஆண்டு நடக்கும் உள்ளாட்சித் தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் தயாராவோம்

வயநாட்டில் பெற்ற வெற்றியைத் தொடர்நது ராகுல் காந்தி முதல் முறையாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று 3 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கல், எம்எல்ஏக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.

கோழிக்கோடு விமானநிலையத்துக்கு இன்று நன்பகல் 1.30 மணிக்கு வரும் ராகுல் காந்தி, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள காளிக்காவு, நிலம்பூர், அரிக்கோடு பகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து,  கல்பேட்டாவில் இரவு தங்குகிறார்.

நாளை காலை வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு சென்று விழாவில் பங்கேற்கும் ராகுல் காந்தி, அங்கிருந்து கல்பேட்டா, கம்பளக்காடு, பணமரம், புள்ளப்பள்ளி, சுல்தான் பத்தேரி ஆகிய பகுதிகளுக்குச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை கோழிக்கோட்டில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல் காந்தி, எங்கப்புழா, முக்கும் ஆகியநகரில் நடக்கும் விழாவில் ராகுல் பங்கேற்கிறார். அதன்பின் நண்பகல் 1 மணிக்கு கோழிக்கோட்டில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறார் " எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in