

பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டிலும், மோசடிக் குற்றத்திலும் சிக்கியுள்ள என் மகன் பினோய் பாலகிருஷ்ணனை நானோ எனது கட்சியோ பாதுகாக்கவில்லை என கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பையில் மதுபான பாரில் நடனமாடும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றி பாலியல் உறவு வைத்து, குழந்தையும் உண்டாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினோய் வினோதினி பாலகிருஷ்ணன் மீது மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் ஐபிசி பிரிவு 420, 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆனால், பிஹாரைச் சேர்ந்த அந்தப் பெண் அளித்த புகார் ஆதாரமற்றது என்று பினோய் பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்து மும்பை போலீஸார் பினோய் பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் கொடியேறி பாலகிருஷ்ணன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மகனைப் பாதுகாக்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பாலகிருஷ்ணன் இன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், "என்னுடைய குடும்பத்தினர் சார்பில், கட்சியின் சார்பில் எனது மகனைப் பாதுகாக்க முயல்கிறோம் எனக் கூறுவதில் உண்மையில்லை. புகார் அளித்த அந்தப் பெண்ணை என் குடும்பத்தில் இருந்து யாரும் தொடர்புகொண்டு பேசவில்லை. என் மகன் நல்ல முதிர்ச்சி பெற்றவர். தனியாக குடும்பத்துடன் வாழ்கிறார். அவரின் செயல்களுக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
இப்போது பினோய் எங்கு இருக்கிறார் என எனக்குத் தெரியாது. கடந்த சில நாட்களாக என் மகனை நான் பார்க்கவில்லை" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கண்ணூர் மாவட்டம், தலசேரி அருகே இருக்கும் பினோயின் சொந்தக் கிராமமான திருவங்காட்டுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் மும்பை போலீஸார் இருவர் சென்று சம்மன் அளித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.