

மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில் 16 பேர் இன்று தங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள மருத்தவகல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால் அவரது உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவரை கடுமையாக தாக்கினார். இதில் அவர் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து மேலும் ஒரு அரசு பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சி மருத்தவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா மட்டுமின்றி பல நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். மேற்குவங்க அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள் 16 கூட்டாக இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதுதொடர்பாக மேற்கு வங்க அரசுக்கு அவர்கள் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் ‘‘மேற்குவங்கத்தில் மருத்துவ துறையின் முன்னேற்றத்துக்கும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறந்த பணியாற்றி வந்தோம். ஆனால் தற்போது நிலவும் சூழலில் தொடர்ந்து எங்கள் பணியை செய்ய முடியாத சூழல் உள்ளது’’ எனவே பணியில் இருந்து விலகுகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வங்க மொழி சினிமா நடிகை, எழுத்தாளர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.