

மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும் அரசு மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள மருத்தவகல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சி மருத்தவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பல நாட்களாக போராட்டம் நடைபெறும் நிலையில் கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்றார். அப்போது தங்களுக்கு நீதி வேண்டும் எனக் கூறி மருத்துவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவர் கோபமடைந்த அவர் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
எனினும் மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தா மட்டுமின்றி பல நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேற்குவங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்தவர்கள் அடையாள போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுபோலவே தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களும் கண்டன பேரணி நடத்தினர்