Last Updated : 24 Jun, 2019 10:44 AM

 

Published : 24 Jun 2019 10:44 AM
Last Updated : 24 Jun 2019 10:44 AM

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீர் விலகல்: பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா தனது பதவிக்காலம் முடிய இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் இன்று திடீரென ராஜினாமா செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 6 மாதங்களில் ரிசர்வ் வங்கியில் உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் ராஜினாமா செய்வது இது 2-வது நிகழ்வாகும். ஏற்கெனவே ரிசர்வ் வங்கியில் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், மத்திய அரசுடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  உர்ஜித்படேல் ஆளுநராகப் பதவி உயர்வு பெற்றபின், ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக  விரால் ஆச்சார்யா கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிகிறது.

இப்போது, விரால் ஆச்சார்யா விலகியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியில் தற்போது என்.எஸ்.விஸ்வநாதன், பி.பி.கனுகோ, எம்.கே.ஜெயின் ஆகிய 3 துணை ஆளுநர்கள் இருக்கிறார்கள். இதில் துணை ஆளுநர் விஸ்வநாதனின் பதவிக்காலம், அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடியும் நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையின் பேராசிரியராக விரால் ஆச்சார்யா பணியாற்றிக் கொண்டிருந்தார். இப்போது, அவர் பதவி விலகியுள்ள நிலையில், மீண்டும் அந்தப் பணிக்கு ஆச்சார்யா திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

விரால் ஆச்சார்யாவின் கொள்கைகள், பொருளாதார திட்டங்கள், சீர்திருத்தங்கள் ஆகியவை, "ஏழை மக்களின் ரகுராம்ராஜன்" என்ற பெயரை பெற்றுக்கொடுத்தன.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் சுயாட்சியில் அதிகமாக தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, வெளிப்படையாக கண்டனம் தெரிவித்த விரால் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கி போன்ற சுயாட்சிமிக்க அமைப்புக்கு சுதந்திரமான முடிவு எடுக்கும் அதிகாரம் அவசியம் என்று குரல் கொடுத்தார்.

மேலும், பண மதிப்பிழப்பு நேரத்தில் அடிக்கடி ரிசர்வ் வங்கி விதிகளை மாற்றிக்கொண்டிருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தபோது, விரால் ஆச்சார்யா அப்போது பணியில் சேர்ந்த நேரத்தில் திறமையாகக் கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x