அதிமுக மக்களவைத் தலைவரானார் ரவீந்திரநாத் குமார்

அதிமுக மக்களவைத் தலைவரானார் ரவீந்திரநாத் குமார்
Updated on
1 min read

அதிமுகவின் மக்களவைத் தலைவராக தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. தமிழகத்தில் பணப் பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அத்தொகுதி நீங்கலாக மீதமுள்ள 38 தொகுதிகளில் 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற்றன.

ஆளும் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றிபெற்றார். இதனால் அதிமுக மக்களவைத் தலைவராகவும் கொறடாவாகவும் அவரே செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரவீந்திரநாத்தை அதிமுக மக்களவைத் தலைவராக நியமனம் செய்து, அதிமுக கட்சித் தலைமை உத்தரவிட்டது. அதற்கான கடிதத்தையும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பியுள்ளது.

இதன் மூலம் கடந்த மக்களவைத் தேர்தலில் 37 எம்.பி.க்களோடு இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுகவின் தற்போதைய ஒரே எம்.பி.யான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மக்களவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in